விஜிலென்ஸ் போலீஸ் சுற்றிவளைப்பு லஞ்ச பணத்துடன் குளத்தில் குதித்து தப்ப முயன்ற விஏஓ அதிரடி கைது: தண்ணீரில் வீசப்பட்ட ரூபாய் நோட்டுகளை தேடும் பணி தீவிரம்

கோவை: கோவையில் வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் போலீசாருக்கு பயந்து குளத்தில் குதித்து தப்ப முயன்றபோது கைது செய்யப்பட்டார். அவர் குளத்தில் வீசிய பணத்தை தேடி வருகின்றனர். கோவை பேரூர் அடுத்த ஆலாந்துறை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (62). இவர் வாரிசு சான்றிதழ் கேட்டு மத்துவராயபுரம் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) வெற்றிவேல் (35) என்பவரை அணுகினார். அப்போது அவர் வாரிசு சான்றிதழ் வழங்க ₹5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து கிருஷ்ணசாமி கோவை லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திவ்யா மற்றும் போலீசார் அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளனர். கிருஷ்ணசாமி நேற்று முன்தினம் அந்த பணத்தை எடுத்து கொண்டு வெற்றிவேல் கூறிய சுண்டக்காமுத்தூர் சாலையில் உள்ள புட்டுவிக்கி பகுதிக்கு சென்று கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வெற்றிவேலை பிடிக்க முயன்றனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வெற்றிவேல், தனது பைக்கை எடுத்து கொண்டு தப்பினார்.

அவரை போலீசார் விடாமல் துரத்தினர். போலீசார் பின் தொடர்ந்து வருவதை பார்த்த வெற்றிவேல் பேரூர் குளத்தேரி சாலையில் தனது பைக்கை நிறுத்தி பேரூர் குளத்தில் இறங்கி ஓடினார். அப்போது, லஞ்சமாக வாங்கிய பணத்தை குளத்தில் வீசியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த போலீசாரும் குளத்தில் இறங்கி வெற்றிவேலை பிடித்து கைது செய்தனர். இரவு நேரம் என்பதால் குளத்தில் வீசப்பட்ட ரூபாய் நோட்டுகளை போலீசாரால் மீட்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து, போலீசார் நேற்று காலை பேரூர் குளம் பகுதிக்கு வந்தனர். அங்கு பேரூர் பேரூராட்சி ஊழியர்கள் 4 பேர் உதவியுடன் வெற்றிவேல் வீசிய பணத்தை தேடினர். ஆனால், அந்த பணம் கிடைக்கவில்லை. அவர் பணத்தை எங்கு வீசினார் என்பது குறித்தும் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விஜிலென்ஸ் போலீஸ் சுற்றிவளைப்பு லஞ்ச பணத்துடன் குளத்தில் குதித்து தப்ப முயன்ற விஏஓ அதிரடி கைது: தண்ணீரில் வீசப்பட்ட ரூபாய் நோட்டுகளை தேடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: