இந்தாண்டும் தோட்டக்கலைத்துறைக்கென தனித்துவமாக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். வேளாண் பொருட்களை பொறுத்தவரை சில முக்கிமான பொருட்களுக்கு ஆதார விலை என்பது இருந்து வருகிறது. அந்தவகையில் விளைப்பொருட்களை வாங்குபவர்களுக்கும் கஷ்டமில்லாமல்; விற்பனை செய்பவருக்கும் கஷ்டமில்லாமல் எந்த அளவிற்கு தேவையோ அவ்வாறு உற்பத்தி செய்யும் வகையில் நடவடிக்கை எடுப்போம். அதேபோல், பனைமரத்தின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பனைமரத்தின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கவும் வேளாண் துறையில் சிறப்பு திட்டம் உள்ளது.
அதன்படி, தமிழ்நாடு பனைப்பொருள் வளர்ச்சி வாரியத்துடன் இணைந்து தயாரிப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு இந்த நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். குறிப்பாக, விதை உற்பத்தி செய்வதற்கு இந்த நிறுவனத்திடம் இருந்து வாங்குகிறோம். அதேபோல் பொருளீட்டு கடன் கொடுக்கிறோம். வேளாண் சந்தையில் அவர்களுடைய பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. வேளாண் துறை சார்ந்து படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க முன்வருபவர்களுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்து அதனை பரிசீலனை செய்து அவர்கள் கடை வைப்பதற்கு, விதை மற்றும் உரம் விற்பனை செய்வதற்கான உரிமம் உள்ளிட்டவைகளை வேளாண் துறை மூலமாக அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறோம்.
அதேபோல், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலமாக 46 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமான விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு முன்பு விவசாயிகளின் கோரிக்கைகளான டெல்டா இல்லா மாவட்டங்களுக்கு சிறப்பு தொகுப்பு திட்டம், இயற்கை வேளாண்மை பரவலாக்க திட்டம் போன்ற கோரிக்கைகளின் அடிப்படையில் தற்போது இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளோம். அந்தவகையில் விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை தான் தற்போது செயல்படுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post ‘ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்’ மூலம் 46,000 ஏக்கர் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றம்: வேளாண்துறை செயலாளர் தட்சிணாமூர்த்தி பேட்டி appeared first on Dinakaran.