திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்: ஏப். 7ம் தேதி ஆழித்தேரோட்டம்

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் வரும் ஏப்ரல் 7ம் தேதி நடைபெறுகிறது. திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலானது சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும், சமய குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற தலமாகவும் உள்ளது. இக்கோயிலின் ஆழித்தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்படுகிறது.

இந்தாண்டு பங்குனி உத்திர பெருவிழா பந்தல்கால் நடவு கடந்த மாதம் 11ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் பங்குனி பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக காலை 8.30 மணியளவில் விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் மற்றும் சந்திரசேகரர் சுவாமிகளின் வீதியுலா காட்சி நடைபெற்றது. அதன் பின் தியாகராஜ சுவாமிக்கும், அதன் சன்னதி எதிரே உள்ள பெரிய கொடிமரத்திற்கும் சிவாச்சாரியர்கள் மூலம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்களின் ஆரூரா தியாகராஜா கோஷத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தியாகராஜரை வழிபட்டனர். வரும் ஏப்ரல் 7ம் தேதி ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ளது.

The post திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்: ஏப். 7ம் தேதி ஆழித்தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: