15.3.2025 – சனி சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாள் திருக்கல்யாணம்
108 திருத்தலங்களில் ஒன்றான சிதம்பரம் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் மாசி மகத்தை முன்னிட்டு சிதம்பரத்தில் இருந்து புறப்பட்டு கிள்ளையில் கடல் (வங்கக்கடல்) தீர்த்தவாரி கண்டருளி, அங்கிருந்து புறப்பட்டு வெள்ளாற்று கரை கடந்து புவனகிரிக்கு எழுந்தருள்வார். சுமார் 100 வருடங்களுக்கு மேலாக கீழ்புவனகிரி நன்னைய ராமானுஜ கூடத்தில் நடைபெறும் மண்டகப்படியில் காலையில் சுவேத நதி நீரைக் கொண்டு விசேஷமான அலங்காரத் திருமஞ்சனம் நடைபெறும். மாலையில் பெருமாள் வீதியில் அமைக்கப்பட்ட வண்ணப் பந்தலில் எழுந்தருளி, ஆலய தரிசன அறக்கட்டளையின் திருக்கல்யாண உற்சவம் கண்டருள்வார். அதற்குப் பிறகு விசேஷமான ஆராதனைகள் நடைபெற்று மேள தாளங்களோடு திருவீதி வலம் நடைபெறும்.
15.3.2025 – சனி சம்பத் கௌரிவிரதம்
அம்பாளுக்கு உகந்த நாட்களை கவுரி விரத நாட்கள் என்பார்கள். அன்று வீட்டில் கலசம் வைத்து அம்பாளை ஆவாஹனம் செய்து வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு பெயர்களில் இந்த விரதம் வரும். பங்குனி மாத வளர்பிறை திருதியை திதியில் விரதம் இருந்து வழிபட்டால், சம்பத் அதாவது செல்வம் பெருகும் என்பதால் இதற்கு சம்பத் கௌரி விரதம் என்று பெயர்.தான்யம், செல்வம், வம்சம் விருத்தியாகும். ஆரோக்கியம் பெருகும். திருச்சிக்கு அருகிலுள்ள துறையூரில் சம்பத்கவுரி உடனாய நந்தீஸ்வரர் கோயில் உள்ளது. காசி அன்னபூரணியையும் சம்பத்கவுரி என்பார்கள்.
15.3.2025 – சனி திருக்குறுங்குடி பிரம்மோற்சவ கொடி ஏற்றம்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தலம் திருக்குறுங்குடி. 108 திருத்தலங்களில் ஒன்று. மற்ற தலங்களைப் போல் இல்லாமல் இங்கு கொடிமரம் விலகி இருக்கும். சிவன் சந்நதியும் உள்ள பெருமாள் கோயில் இது. அற்புதமான கலைச் செல்வங்கள் உள்ள இந்தத் திருத்தலத்தில் மலைமேல் ஒரு கோயிலும் உண்டு. இசையோடு சம்பந்தப்பட்ட தலம் இது. கைசிக பண் அதாவது (இன்றைய பைரவி ராகம்) பாடி இறைவனை மயக்கி பிரம்ம ராட்சசனின் சாபம் தீர்த்த தலம் இது. இத்தலத்து இறைவனை நம்மாழ்வார் உருகி உருகிப் பாடியிருக்கிறார். பற்பல உற்சவங்கள் இத்தலத்தில் நடைபெற்றாலும் பங்குனியில் நடைபெறும் பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பானது. அந்த உற்சவத்தின் துவஜாரோகணம் (கொடியேற்றம்) இன்று. இன்றிலிருந்து தொடர்ச்சியாக காலையில் மாலையிலும் பற்பல வாகனங்களில் வீதி உலா கண்டருள்வார். 19.3.2025 புதன்கிழமை பிரசித்திபெற்ற கருட சேவை நிகழ்ச்சி நடைபெறும்.
16.3.2025 – ஞாயிறு சமயபுரம் பூச்சொரிதல் விழா
சமயபுரம் மாரியம்மன் பிரசித்திபெற்ற அம்மன். அங்கு பங்குனியில் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடக்கும். 28 நாட்கள் நடக்கும் இந்த விழாவுக்கு அம்மன் பச்சைப் பட்டினி விரதம் என்பார்கள். அம்மனுக்கு எந்தவித பிரசாத நிவேதனமும் கிடையாது. வெறும் துள்ளு மாவு, நீர்மோர், இளநீர், பானகம்தான் நிவேதனம். 28 நாட்கள் அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும் போது, பூச்சொரிதல் விழா நடைபெறும். அதுவும் வெயில் காலத்தில் அம்மனுக்கு பூக்களால் அர்ச்சனை செய்வது எத்தனை விசேஷம்!
இதில் முதல் பூக்கூடை ஸ்ரீரங்கத்திலிருந்து ஸ்ரீரங்கநாதர் சீர் வரிசையாக வரும். பிறகு பக்தர்கள் தட்டுத் தட்டாக, கூடை கூடையாக பூக்களைக் கொண்டு வருவார்கள். இவ்விழாவில் கலந்து கொண்டு அம்மனை வேண்ட விசேஷ வரங்களைத் தருவாள். இந்த பூச்சொரிதல் விழாவில் அம்மனை தரிசித்தால் போதும். அனைத்தும் நலமாகும்.
16.3.2025 – ஞாயிறு சூரியஹஸ்தம்
சூரியனுடைய ஞாயிற்றுக் கிழமையும் சந்திரனுடைய ஹஸ்த நட்சத்திரமும் இணைந்து வரும் நாளுக்கு சூரியஹஸ்த நாள் என்று பெயர். அன்றைய நாட்களில் அபிஷேக ஆராதனைகள், எல்லா விதமான ஹோமங்கள் செய்யலாம். அன்று விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், சௌந்தர்ய லகரி, லலிதா சகஸ்ரநாமம், ருண விமோசன ஸ்தோத்திரம், அபிராமி அந்தாதி முதலிய நூல்களை பாராயணம் செய்வதன் மூலமாக மிகச் சிறப்பான பலன்களை அடையலாம், இந்த நாளில் பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதன் மூலமாக சூரிய சந்திர பகவானின் பேரருளைப் பெறலாம். பதவி உயர்வு, பொன் பொருள் சேர்க்கை, முதலிய செல்வங்களை அடைவதற்கு ஏற்ற வழிபாட்டினை செய்யும் நாள் இந்த நாள்.
17.3.2025 – திங்கள்நத்தம் மாரியம்மன் மஞ்ச பாவாடை உற்சவம்
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில் நத்தம் மாரியம்மன் கோயில் ஆகும். இக்கோயிலின் முக்கிய விழாவான மாசிப் பெருந் திருவிழா நடைபெற்று வருகின்றது. இதற்காக உலுப்பகுடி அருகிலுள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடி மஞ்சள் ஆடை உடுத்திக் கொண்டு தீர்த்தக் குடங்களுடன் அரண்மனை பொங்கலிட்டு மாவிளக்கு பூஜை செய்வர் இந்த திருவிழாவில் பக்தர்கள் காவடி எடுத்து அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்துவர். கழுமரம் ஏறும் நிகழ்வும் உண்டு.
18.3.2025 – செவ்வாய் காரைக்கால் அம்மையார் குரு பூஜை
மூன்று பெண் நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார் மூத்தவர். இயற்பெயர் புனிதவதியார். கயிலை மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, சிவபெருமான் “அம்மையே” என்று அழைத்ததாலும், காரைக்கால் மாநகரில் பிறந்தவர் என்பதாலும், காரைக்கால் அம்மையார் என்று வழங்கப் பெறுகிறார். இசைத் தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாகப் பாடியவர். தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவர். அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை போன்ற நூல்களைத் தந்து சைவத்தமிழுக்குப் பெரும் தொண்டாற்றினார்.
இவருடைய பதிக முறைகளைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் இயற்றப்பட்டன. பன்னிரு திருமுறைகளில் பதினோராந்திரு முறையில் காரைக்கால் அம்மையாரின் மூன்று நூல்கள் இடம் பெற்றுள்ளன. சிவன் கோயில்களில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் சிற்பங்கள் நிறுவப்பட்டிருக்கும். அச்சிற்பங்களில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிப்பது அம்மையின் சிற்பம் மட்டுமே.
காரைக்கால் சிவன் கோயிலில் இவருக்கென தனி சந்நதி அமைக்கப் பட்டுள்ளது. அக்கோயில் “அம்மையார் கோயில்” என்று மக்களால் அழைக்கப் பெறுகிறது. அம்மையார் புனிதவதியின் தோற்றத்துடன் இளமை யோடு உள்ளார். அவருடைய சந்நதியின் சுதைச் சிற்பங்களிலும், சுற்றுப் பிரகார ஓவியங்களிலும் காரைக்கால் அம்மையின் வாழ்க்கை வரலாறு சொல்லப்பட்டுள்ளது.
இறைவன் இவரிடம் வேண்டுவன கேள் என, அதற்கு அம்மையார் கேட்டார். “பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் இறைவா உனை யென்றும் மறவாமை வேண்டும், இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி, அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க’’ என்றார். அவ்வாறே அருளிய இறைவன் அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்டி திருவாலங்காட்டிற்கு வரப்பணித்து அங்கு அருளிய இறைவன் தன் திருவடிக் கீழ் என்றும் இருக்க அருளினார்.
திருஞானசம்பந்தர் தனது ஒவ்வொரு பதிகத்தின் இறுதிப்பாடலிலும் பதிக வரலாற்றைப் பதிவு செய்துள்ளார். அதற்கு முன்னோடியாக அமைந்தவர் காரைக்கால் அம்மையார் ஆவார். அம்மையார் தனது பதிகங்களின் இறுதியில் குறிப்பாகத் தனது வரலாற்றைப் பதிவு செய்துள்ளமை கடைக் காப்பு நெறிக்குத் தோற்றுவாயாக அமைந்தது.
திருஞானசம்பந்தர் தனக்குப் புது வழிமுறை காட்டிய காரைக்கால் அம்மை யார் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார் என்பதற்கு ஆறுமுகநாவலர் எழுதிய காரைக்கால் அம்மையார் புராணத்தில் வரும் செய்தி சான்றாக அமைகிறது. “அம்மையார் தங்கிய திருவாலங்காட்டை மிதித்தற்குத் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அஞ்சித் தயங்கினார்’’ என்பது அச்செய்தி.
18.3.2025 – செவ்வாய் திருப்பரங்குன்றம் தெய்வானை திருக்கல்யாணம்
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி பெருவிழா வருகிற 5-ந்தேதி காலை 9.15 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா 20-ந் தேதி வரை 15 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. முக்கிய விழாக்களாக 16-ந் தேதி சூரசம்கார லீலை, 17-ந் தேதி பட்டாபிஷேகம் நடக்கிறது. திருவிழாவின் முத்தாய்ப்பாக 18-ந் தேதி பகல் 12.15 மணிக்கு மேல் 12.45 மணிக்குள் முருகப்பெருமான், தெய்வானைக்கு திருக்கல்யாணம் வைபோகம் நடக்கிறது. சிகர நிகழ்ச்சியாக 19-ந் தேதி காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 20-ந் தேதி தீர்த்த உற்சவம் நடக்கிறது.
திருக்கல்யாணத்தை ஒட்டி அதிகாலை 5 மணி அளவில் உற்சவர் சந்நதியில் தெய்வானையுடன் முருகப் பெருமானுக்கு தங்கம், பவளம், வைடூரிய, பல்வேறு விதமான நகைகளும், வாசனை கமழும் மலர் மாலைகளும், பட்டு பீதாம்பரமும் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படும். மேளதாளங்கள் முழங்க உற்சவர் சந்நதியில் இருந்து தெய்வானை முருகப் பெருமான் புறப்பட்டு சந்நதி தெரு வழியாக மூலக்கரையில் உள்ள சந்திப்பு மண்டபத்திற்கு வருவார். அதே சமயத்தில் மதுரையில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரரும் மீனாட்சியம்மனும் புறப்பட்டு திருப்பரங்குன்றம் வந்து சேருவர் அங்கே முருகப் பெருமானுக்கு பெற்றோர்களான மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் முன்னிலையில் கோலாகலமாக திருமண விழா நடைபெறும். அப்பொழுது ஏராளமான பெண்கள் தாலி மஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வர். இரவு 7:00 மணி அளவில் 16 கால் மண்டப வளாகத்தில் பூ பல்லக்கில் தெய் வானையுடன் முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
16.3.2025 – ஞாயிறு – காங்கேயம் முருகப் பெருமான் விடையாற்றி உற்சவம்.
16.3.2025 – ஞாயிறு – வேதாரண்யம் கோயிலின் உற்சவம் சுவாமி வீதி உலா.
18.3.2025 – செவ்வாய் – நத்தம் மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா, மாலை பூக்குழி விழா.
18.3.2025 – செவ்வாய் – ராஜமன்னார்குடி பங்குனி உற்சவம் ஆரம்பம்.
19.3.2025 – புதன் – திருப்பரங்குன்றம் ஸ்ரீமுருகப் பெருமான் பெரிய வைரத்தேரில் பவனி.
20.3.2025 – வியாழன் – சஷ்டி விரதம்.
21.3.2025 – வெள்ளி – சங்கரன்
கோவில் கோமதி அம்மன் தங்க பாவாடை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.
The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.