ஈரோடு,மார்ச்15: காசிபாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. காசிபாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆங்கிலம் மற்றும் தமிழ் வழிக் கல்வி கற்பிக்கப்படுகிறது. 165 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் நடப்பு 2025-26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 1ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இங்கு மாணவர் சேர்க்கையை வயுறுத்தி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக நேற்று மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேரணி பள்ளியில் தொடங்கி, கல்யாணசுந்தரம் வீதி, மலைக்கோயில் உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. இப்பேரணியில் பங்கேற்ற மாணவ,மாணவிகள், அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளை சேர்ப்பதன் அவசியத்தையும்,அதனால் கிடைக்கும் சலுகைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட நோட்டீஸ்களை வீடுகள் தோறும் வினியோகித்துச் சென்றனர். இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் பள்ளி ஆசிரியைகள் அனைவரும் கலந்துகொண்டனர்.
The post காசிபாளையத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் appeared first on Dinakaran.