சபரிமலை செல்லும் பக்தர்கள் இயற்கை மரணமடைந்தால் ரூ.3 லட்சம் இன்சூரன்ஸ்: தேவசம்போர்டு திட்டம்

திருவனந்தபுரம்: திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறியது: கடந்த 2011ம் ஆண்டு புல்மேட்டில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் உயிரிழந்தனர். இதன்பிறகு சபரிமலை பக்தர்கள் மரணமடைந்தால் அவர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த வருடம் முதல் பக்தர்களுக்கு ரூ. 5 லட்சம் விபத்து இன்சூரன்ஸ் அமல்படுத்தப்பட்டது.

இது விபத்தில் மரணமடைபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். மாரடைப்பு உள்பட இயற்கையாக மரணமடைபவர்களுக்கு குறுகிய காலத்திற்கான இன்சூரன்ஸ் திட்டம் கிடையாது. ஆனாலும் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தேவசம் போர்டு தீர்மானித்துள்ளது. இதற்காக ஒரு நிவாரண நிதி ஏற்படுத்தப்படும். இதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களிடமிருந்து ரூ. 5 கட்டணமாக வசூலிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது கட்டாயமல்ல.

இதன் மூலமும், நன்கொடையாளர்களிடமிருந்தும் நிதி சேகரிக்கப்படும். இந்த நிதியிலிருந்து சபரிமலையில் இயற்கையாக மரணமடையும் பக்தர்களுக்கு ரூ. 3 லட்சம் இன்சூரன்ஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த மண்டலகாலம் முதல் இந்தத் திட்டத்தை அமல்படுத்த தீவிரமாக ஆலோசித்து வருகிறோம் என்றார்.

* கோயில் நடை திறப்பு
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நேற்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாசி மாத பூஜைகள் தொடங்குகின்றன. நேற்று முதல் 18ம்படி ஏறியவுடன் நடை மேம்பாலத்தில் ஏறாமல் கொடிமரத்தின் இடது மற்றும் வலதுபுறம் வழியாக இரு வரிசைகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் வழக்கத்தை விட சற்று அதிக நேரம் ஐயப்பனை தரிசிக்க முடிந்தது. இது பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தரிசனம் செய்த பின்னர் இடதுபுறம் வழியாக வழக்கம்போல மாளிகைப்புரத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

The post சபரிமலை செல்லும் பக்தர்கள் இயற்கை மரணமடைந்தால் ரூ.3 லட்சம் இன்சூரன்ஸ்: தேவசம்போர்டு திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: