இடப்பிரச்னை தொடர்பாக தகராறு அம்மிக்கல்லால் தாக்கி விஏஓ படுகொலை: தாய், 2 மகன்கள் கைது

திருமங்கலம்: திருமங்கலத்தில் அம்மிக்கல்லை தலையில் போட்டதில் படுகாயம் அடைந்த விஏஓ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக தாய், 2 மகன்களை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், திருமங்கலம், முன்சீப் கோர்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (45). உரப்பனூர் விஏஓவாக பணியாற்றி வந்தார். மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். திருமங்கலம் முகமதுஷாபுரம் நேரு தெருவைச் சேர்ந்தவர் ராஜாமுகமது (45).

இவரது மனைவி சம்ரத் பீவி (42). இவர்களுக்கு ரபிக்ராஜா (19) மற்றும் 16 வயது மகன் உள்ளனர். ராஜாமுகமது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இடப்பிரச்னை தொடர்பாக விஏஓ முத்துப்பாண்டியை, சம்ரத்பீவி சந்தித்தார். அப்போது அவர்களுக்குள் கருத்து மோதல் தகராறு உருவாகியுள்ளது. இதையடுத்து சம்ரத் பீவி தனது இரு மகன்களுடன் நேற்று முன்தினம் அதிகாலை விஏஓ முத்துப்பாண்டியின் வீட்டிற்கு சென்றார்.

அங்கு கதவை உடைத்து மூவரும் உள்ளே சென்று மனைவி, குழந்தைகள் கண் முன்பு விஏஓ முத்துப்பாண்டி தலை மீது ரபிக்ராஜா அம்மிக்கல்லை தூக்கிப் போட்டுள்ளார். படுகாயமடைந்த முத்துப்பாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து ரபிக்ராஜா, அவரது சகோதரர் மற்றும் தாய் சம்ரத் பீவியை கைது செய்தனர்.

இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் விஏஓ முத்துப்பாண்டி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். கைதான மூவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். 16 வயது சிறுவன் சீர்திருத்த பள்ளியிலும், ரபிக்ராஜா, சம்ரத் பீவி ஆகியோர் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

The post இடப்பிரச்னை தொடர்பாக தகராறு அம்மிக்கல்லால் தாக்கி விஏஓ படுகொலை: தாய், 2 மகன்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: