சென்னை: சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவே, 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பின்னர் அவர் ஆற்றிய உரையில்,
“இந்தியாவின் 2வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு.
*எத்தனை தடைகள் வந்தாலும் சமநிலை தவறாது, நம் உரிமைகளைக் காக்கும் முதலமைச்சரை நாடே பாராட்டிக்கொண்டு இருக்கிறது.
*மகளிருக்கு வாக்குரிமை வழங்கிய சென்னை மாகாணத்தின் வழியில் அவர்களுக்கு சொத்துரிமை வழங்கியது தமிழ்நாடு.
*இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது. பன்முக வளர்ச்சியை நோக்கி நடைபோடுகிறது.
*இருமொழிக்கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதால் உலக அளவில் தமிழர்கள் தடம் பதிக்கின்றனர்.
*நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தொழில்நுட்பத்தின் துணை கொண்டு தீர்வு காணப்பட வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டமிடல் தமிழ்நாட்டுக்கு தேவைப்படுகிறது. வளர்ச்சிக்காக தமிழ்நாடு தேர்ந்தெடுத்த பாதை தனித்துவம் மிக்கது.
*தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு வழிகாட்டும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. மக்கள் நலன் காத்திடும் கருவியாக நிதி நிலை அறிக்கை வரவு, செலவு திட்டத்தை பயன்படுத்திட வேண்டும்.
*கல்வி, சுகாதாரம், தொழில்துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. செயற்கை நுண்ணறிவில் இளைஞர்களின் பணித்திறன் மேம்பாடு உரிய கவனம் பெற வேண்டும்.
*திருக்குறள் இதுவரை 28 இந்திய மொழிகள், 35 வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் 45 நாட்டு மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்க்க ரூ.4.35 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 500 இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
*பழம்பெரும் ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
*தமிழர்கள் அதிகம் வசிக்கும் பிற இந்திய பெருநகரங்கள், துபாய் சிங்கப்பூர், கோலாலம்பூர் நகரங்களிலும் ரூ.2 கோடியில் தமிழ்ப்புத்தக கண்காட்சி நடத்தப்படும்.
*தமிழ் பெருமை பரவிட பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் வகையில் உலக தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும். உலக தமிழ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுத் தொகை வழங்க ரூ.1 கோடி ஒதுக்கப்படும்.
*ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகரிக்கப்பட்ட 193 மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்படும்.இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் எழுதப்பட வேண்டும். மதுரையில் மொழிகளின் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
*வரும் ஆண்டில் கீழடி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் தொல்லியல் ஆய்வு நடைபெற உள்ளது.ஆந்திரா, ஒடிசாவிலும் தொல்லியல் ஆய்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். தொல்லியல் ஆய்வுக்காக ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
*ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம், ராமநாதபுரம் மாவட்டம் நாவாயில் ரூ.21 கோடியில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும். தாம்பரத்தில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும்.
*கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும். கிராம சாலைகளை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,087 கோடி ஒதுக்கப்படும். 100 வேலை திட்டத்திற்கு ரூ.3790 கோடியை நிதி ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இந்த நிதியை விரைந்து ஒதுக்க கோரிக்கை விடுக்கிறோம்.
*சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரை 3 கி.மீ தூரத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்கப்படும். அடையாறு நிதி சீரமைப்பு பணியில் சைதாப்பேட்டை முதல் திரு.வி.க பாலம் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
*சென்னை மாநகரப்பகுதியில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் செயல்படுத்தப்படும். இதன்மூலம் ஒரு பகுதியில் உபரியாக உள்ள தண்ணீரை, மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்லப்படும். புதிதாக 7 மழைநீர் உறிஞ்சு பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும்.
*தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த பட்ஜெட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*நாட்டிலேயே அதிக நகரமயமாக்கல் சவாலை தமிழ்நாடு சந்தித்துவருகிறது. இதற்கேற்ற, குடிநீர், சாலை, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்கின்றன. எனினும் புதிய நகரங்கள் அமைக்கும் தேவை உள்ளது.
*சென்னைக்கு அருகே 2000 ஏக்கரில் புதிய நகரம் அமைக்கப்படும். நவீன வசதிகள் கொண்டதாக இந்நகரம் அமையும். சென்னையை புதிய நகருடன் இணைத்திட போக்குவரத்து, மெட்ரோ வழித்தட நீட்டிப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும்
*மகளிர் நலத் திட்டங்களுக்கெல்லாம் மகுடம் வைத்தது போல் அறிவிக்கப்பட்ட ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்’ மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே பதினைந்து இலட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது.
*இத்திட்டத்தினால் பயன்பெறும் இல்லத்தரசிகளுக்கு, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்பது, அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருப்பது மட்டுமன்றி, அவர்கள் கணிசமாக சேமிக்கவும் வழிவகுக்கிறது.
*இதுவரை, மகளிர் உரிமைத்தொகை பெற்றிடாத தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும். மகளிர் நலன் காக்கும் இத்திட்டத்திற்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 13,807 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*விடியல் பயணம் காரணமாக பேருந்து பயணம் செய்யும் பெண்களின் சதவீதம் 60 வரை உயர்ந்துள்ளது. மாதம் 888 ரூபாயை பெண்கள் சேமிப்பதாக திட்டக்குழு அறிக்கை கூறுகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதியவர்கள் விண்ணப்பிக்க உரிய வாய்ப்பு விரைவில் வழங்கப்படும்.
*பணிபுரியும் பெண்களின் வசதிக்காக மேலும் 10 இடங்களில் தோழி விடுதிகள் கட்டப்படும். மாவட்டம்தோறும் இவ்வகை விடுதிகள் அமைக்கும் இலக்கை நோக்கி அரசு செல்கிறது. மூன்றாம் பாலினத்தவரின் சமூக மேம்பாட்டை உறுதி செய்ய, உயர்கல்வி செல்லும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும்.ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
*முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம் 17.53 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இத்திட்டத்தால் மாணவர்களின் வருகை மற்றும் ஊட்டச்சத்து அதிகரித்துள்ளது. நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவு செய்யப்படும். பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
*மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாநகராட்சிகளில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 25 அன்புச்சோலை மையங்கள் அமைக்கப்படும்.
*மும்மொழிக்கொள்கையை ஏற்காததால் ஒன்றிய அரசு ரூ.2150 கோடியை தமிழ்நாடு அரசுக்கு வழங்கவில்லை. மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து இதற்காக நிதியை விடுவித்துள்ளது. இருமொழிக் கொள்கையை விட்டுத்தரமாட்டோம் என உறுதியாக உள்ள முதல்வரின் பக்கம் நின்று மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
*பழங்குடி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க 14 உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அரசு பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும்.
The post இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறாத பெண்கள், விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் : அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.