பொது இடங்களில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு தர உரிய கட்டணத்தை நிர்ணயித்து வசூலிக்க உத்தரவு!!

சென்னை : நாம் தமிழர் கட்சி பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி திருப்போரூர் மாவட்ட செயலாளர் சசிகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் மார்ச் 16ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த கோரியும், பஞ்சமி நில மீட்க கோரியும் பேரணி – பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டதாகவும், பேரணி, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி திருப்போரூர் காவல் நிலையத்தில் விண்ணப்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் கந்தசாமி கோவில் மாசி பிரம்மோற்சவ விழா, முகூர்த்த நாள் எனவும், கலந்து கொள்வோரின் எண்ணிக்கை தெரிவிக்கப்படவில்லை எனக் கூறி, பேரணி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அனுமதி மறுத்த காவல் துறை உத்தரவை ரத்து செய்து, பேரணி – பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி சீமான் நடத்தும் பேரணி, பொதுக்கூட்டத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குகிறோம். பேரணியை மாலை 5 மணிக்கு தொடங்கி 6 மணிக்குள் முடிக்க வேண்டும். அதற்கு மேல் பொதுக்கூட்டம் நடத்திக்கொள்ளலாம். பேரணி, பொதுக்கூட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்பட்டால் நாம் தமிழர் கட்சிதான் பொறுப்பேற்க வேண்டும். கட்சியினர் தினமும் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு தருவது போலீசாரின் பணி அல்ல. இனி வரும் காலங்களில் பொது இடங்களில் நடைப்பெறும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குவதற்காக கட்டண தொகையை நிகழ்ச்சி நடத்தும் கட்சிகளிடம் வசூலிக்க வேண்டும்,”என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

The post பொது இடங்களில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு தர உரிய கட்டணத்தை நிர்ணயித்து வசூலிக்க உத்தரவு!! appeared first on Dinakaran.

Related Stories: