பள்ளிப்பட்டு, மார்ச் 13: பள்ளிப்பட்டு அருகே, குமாரமங்கலம் கிராமத்தில் இருந்த பழமையான ஸ்ரீ கோளத்தம்மன் கோயில் சிதிலமடைந்து காணப்பட்டது. அம்மனுக்கு புதிதாக கோயில் கட்ட கிராம மக்கள் முடிவு செய்து கடந்த 3 ஆண்டுகளாக கோயில் திருப்பணிகள் நடைபெற்று வந்தது. கோபுரம், செல்வவிநாயகர் சன்னதி, நாகாலம்மன் சன்னதி, நவகிரக மூர்த்திகள் சன்னதிகள் அமைக்கப்பட்டது. கோயில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை 3 நாட்கள் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
விழாவையொட்டி, கோயில் மற்றும் கிராம வீதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு நித்திய ஹோமகுண்ட பூஜைகள் நடைபெற்றது. விழாவில் 3ம் நாளான நேற்று காலை விநாயகர் பூஜை, மஹா பூர்ணாஹூதி ஹோம பூஜைகள் தொடர்ந்து மேள தாளங்கள், கேரள செண்டை மேளம் முழங்க ஏராளமான பக்தர்கள் குவிந்திருக்க புனித நீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று விமான கோபுர கலசத்திற்கு புனித நீரால் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தி பரவசத்துடன் பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து மூலவர் கோளாத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்று மகா தீபாராதனையுடன் அம்மனை பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு வாண வேடிக்கையுடன் அம்மன் கிராம வீதியுலா நடைபெற்றது. குமாரமங்கலம் கிராம மக்கள் மகா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்திருந்தனர்.
The post பள்ளிப்பட்டு அருகே கோளாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம் appeared first on Dinakaran.