திருவள்ளூர், மார்ச் 13: ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.
அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கு பிஎஸ்சி, எம்எஸ்சி நர்சிங் பட்டப்படிப்பு, போஸ்ட்பேசிக் பி.எஸ்சி நர்சிங் மற்றும் பொது செவிலியர் மருத்துவப் படிப்பு ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்பயிற்சியில் பங்கு பெற 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கு காலஅளவு இரண்டு மாதமும் விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் அளிக்கப்படும். இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களுக்கு, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கு பயிற்சி appeared first on Dinakaran.