குன்னம் அருகே வசிஷ்டபுரம் ஊராட்சியில் வாரியில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் தவறி விழுந்து பலி

 

குன்னம், மார்ச் 12: குன்னம் அருகே வசிஷ்டபுரம் ஊராட்சியில் உள்ள வாரியில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் தவறி விழுந்து பலியானார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வசிஷ்டபுரம் ஊராட்சி பள்ளக் காளிங்கராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து (28). இவரது மனைவி வசந்தி தற்சமயம் கர்ப்பமாக உள்ளார். முத்து நேற்று முன்தினம் மாலை அதே ஊரில் உள்ள பச்சையம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள வாரியில் அவரது தாயார் ராகினி உடன் மீன் பிடிக்க சென்றார்.

அந்தப் பகுதி மக்கள் வாரியில் வலை கட்டி மீன்களை பிடித்து வருகின்றனர். அதன்படி முத்து கட்டிய வலையில் சிக்கிய மீன்களை 25 லி கேன் மீது அமர்ந்து கொண்டு கரையில் இருந்த அம்மாவிடம் மீன்களைப் பிடித்து தூக்கி போட்டுக் கொண்டு இருந்தார். அப்போதே எதிர்பாராத விதமாக கேன் தண்ணீரில் கவிழ்ந்தது. இதனால் முத்து தண்ணீரில் மூழ்கி விட்டார்.இதை பார்த்த அவரது தாய் ராகினி சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

முத்து வாரியின் அடிப்பகுதியில் மூழ்கி விட்டதால் அப்பகுதி இளைஞர்கள் சேர்ந்து முத்துவை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது முத்துவை பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த குன்னம் போலீசார் முத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post குன்னம் அருகே வசிஷ்டபுரம் ஊராட்சியில் வாரியில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் தவறி விழுந்து பலி appeared first on Dinakaran.

Related Stories: