அதற்கு ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், தமிழ்நாட்டு எம்பிக்கள் ‘அநாகரிகமானவர்கள்’ என இழிவுப்படுத்தும் வகையில் பேசினார். இதற்கு திமுக எம்பிக்கள் அவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதுதொடர்பாக திமுக எம்பி கனிமொழி ஒன்றிய அமைச்சரின் அநாகரிகமான பேச்சை உடனே அவையிலேயே கண்டித்தார். மேலும், தர்மேந்திர பிரதான் மீது மக்களவை விதி 223ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கினார். இதற்கிடையே ஒன்றிய அமைச்சரின் ‘நா’ தடித்த பேச்சுக்கு தமிழக மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள், கல்வியாளர்கள் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனே பதவி விலக வேண்டும். தமிழ்நாட்டு எம்பிக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதேநேரம், தமிழக மக்களுக்கு எதிராக தொடர்ந்து அவதூறாக பேசிய வரும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து திமுகவினர் மாநிலம் முழுவதும் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னையில் தமிழக முதல்வரின் சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவிக நகர் பேருந்து நிலையம் அருகே பகுதி செயலாளர் ஐசிஎப் முரளி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்துரு, இளைஞரணி துணை அமைப்பாளர் தனசேகர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பெரவள்ளூர் சந்திப்பு பகுதியில் கொளத்தூர் பகுதி செயலாளர் நாகராஜ் தலைமையிலும், பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி அம்பேத்கர் கலை கல்லூரி அருகே பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டிசேகர் தலைமையிலும், திருவிக நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் பேருந்து நிலையம் பகுதியில் திருவிக நகர் மேற்கு பகுதி செயலாளர் தமிழ்வேந்தன் தலைமையிலும், ஓட்டேரி மேம்பாலம் பகுதியில் பகுதி செயலாளர் சாமி கண்ணு தலைமையிலும் ஆரப்பாட்டம் நடத்தப்பட்டு உருவ பொம்மை எரிக்கப்பட்டது. மூலக்கடை சந்திப்பில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து கொடும்பாவி எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தலைமையில் பகுதி செயலாளர்கள் துக்காராம், புழல் நாராயணன், தனியரசு, ஏ.வி.ஆறுமுகம், அருள்தாசன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர். சென்னையில் 31க்கும் மேற்பட்ட இடங்களில் திமுகவினர் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் 125 இடங்களில் நடந்த போராட்டத்தில் ஒன்றிய அமைச்சருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பெண்கள் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் புகைப்படத்தை செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
The post தமிழக எம்பிக்களை அவமதிக்கும் வகையில் பேச்சு ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மை எரிப்பு, ஆர்ப்பாட்டம்: தமிழகம் முழுவதும் 125 இடங்களில் திமுகவினர் சாலை மறியல் appeared first on Dinakaran.
