மும்மொழி கொள்கை பாஜவின் கொள்கை: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி

கோவை: மும்மொழி கொள்கை என்பது பாஜவின் கொள்கை என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் கூறினார். கோவை விமான நிலையத்தில் ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாரதிக்கு பனாரஸ் பல்கலை.யில் இருக்கை அமைத்து கொடுத்திருக்கிறோம். திருவள்ளுவருக்கு உலகம் முழுவதும் கலாச்சார மையங்கள் அமைத்துக்கொடுத்திருக்கிறோம். தமிழ்தான் தொன்மையான மொழி.

உலகம் முழுவதும் தமிழ் மொழியை கொண்டு சேர்த்து பிரதமர் மோடி பெருமை சேர்த்து வருகின்றார். இன்றைக்கு பொதுமக்கள் 3 மொழிகள் வேண்டும் என்று கருதுகின்றனர். மும்மொழி கொள்கை என்பது பாஜவின் கொள்கை. கூட்டணி கட்சிகளுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை உண்டு. பிரதமராக மோடி வந்த பிறகு தான் மீனவர்களுக்கு என்று புதியதாக அமைச்சகம் உருவாக்கப்படடது. 2014ம் ஆண்டுக்கு முன்பு மீனவர் நலனுக்காக ரூ.400 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அடிப்படை தேவைகள், மீனவ கிராமங்கள் மேம்பாடு, மீன்பிடி துறைமுகங்கள் வலுப்படுத்துவது என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மோடி பிரதமராக வந்த பிறகு கடந்த 10 ஆண்டுகளில் மீனவர்கள் மீது அண்டை நாடுகள் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது இல்லை. மீனவர்கள் கைது செய்யப்படும் போது வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கையால் உடனடியாக மீட்டு வரப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post மும்மொழி கொள்கை பாஜவின் கொள்கை: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: