புதுச்சேரி, மார்ச் 8: முதல்வர் ரங்கசாமி பொய்யான வாக்குறுதிகளை அளிக்கக் கூடாது, இன்னும் 6 மாதத்தில் அவரது ஆட்சி முடிந்துவிடும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி இப்போது போராட்ட களமாக மாறியுள்ளது. அனைத்து துறை ஊழியர்களும் அந்தந்த துறையில் போராட்டம் நடத்துகின்றனர். இதைப் பற்றி முதல்வரோ, அமைச்சர்களோ கவலைப்படுவதில்லை. அவர்களை அழைத்தும் பேசுவதில்லை. ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதில்லை. மக்களை புறக்கணிக்கிறது இந்த ஆட்சி.
2021 தேர்தல் அறிக்கையில் மூடப்பட்டுள்ள பஞ்சாலைகள், சர்க்கரை ஆலைகள் திறக்கப்படும் என ரங்கசாமி வாக்குறுதி அளித்தார். ஆனால் இதுவரை திறக்கவில்லை. 4 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தனியார் பங்களிப்புடன் மூடப்பட்ட ஆலைகள் திறக்கப்படும் என கூறுகிறார். பொய்யான வாக்குறுதிகளை கொடுக்கும் முதல்வர் ரங்கசாமி ஆட்சி இன்னும் 6 மாதங்களில் முடிந்துவிடும். புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள், மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. அந்த காவல் நிலையங்களுக்கு தெரிந்தே கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது.
எனது தலைமையிலான ஆட்சிக் காலத்தில் கஞ்சா விற்பவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். இப்போது எந்த காவல் நிலைய சரகத்தில் கஞ்சா விற்கப்படுகிறது என்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியை இந்த அரசால் இடமாற்றம் செய்ய முடியுமா? வில்லியனூர் மற்றும் நகரப் பகுதிகளில் அதிகமாக கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. நூற்றுக்கு நூறு சுக பிரசவம் புதுச்சேரியில் நடக்கிறது. இது நமது மாநிலத்திற்கு பெருமை.
ஆனால் தற்போது ஜிப்மர் மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி பெண்களை புதுச்சேரியை தவிர்த்து வெளியூரில் இருந்து வந்தால் அவர்களை எங்கிருந்து வருகிறீர்களோ அங்கேயே சென்று பிரசவம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி வருகின்றனர். இது மக்களின் உயிரோடு விளையாடும் செயல். ஜிப்மரிலேயே மருத்துவம் செய்ய நான் வலியுறுத்துவேன். மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என எங்களது ஆட்சியில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன். எங்களது ஆட்சியில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை தடுத்து நிறுத்தினோம். இந்த ஆட்சியில் தான் சிபிஎஸ்இ கொண்டு வந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
The post பொய் வாக்குறுதிகள் அளிப்பதா? இன்னும் 6 மாதத்தில் ரங்கசாமி ஆட்சி முடிந்துவிடும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி appeared first on Dinakaran.