இங்கிலாந்து சென்றுள்ள ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கரை தாக்க காலிஸ்தான் ஆதரவாளர்கள் முயற்சி: இந்தியா கடும் கண்டனம்

லண்டன் சீக்கியர்களுக்கு தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி வரும் காலிஸ்தான் அமைப்பினர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் உள்ள இந்து கோயில்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் கோயில்களில் எழுதி வைப்பது, இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஏற்கனவே இந்தியா கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் ஒன்றிய வௌியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இங்கிலாந்து, அயர்லாந்து நாடுகளுக்கு 6 நாள் சுற்று பயணம் சென்றுள்ளார். நேற்று லண்டனில் உள்ள சாடம் ஹவுசில் இங்கிலாந்து வௌியுறவு செயலாளர் டேவிட் லாமியை சந்தித்து இந்தியா, இங்கிலாந்து உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதித்தார். இந்த சந்திப்பை முடித்து கொண்டு அமைச்சர் ஜெய்சங்கர் வௌியே வந்தபோது, சாடம் ஹவுஸ் முன் கூடியிருந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள், கைகளில் காலிஸ்தான் ஆதரவு கொடிகளுடன், ஜெய்சங்கருக்கு எதிராக முழக்கமிட்டனர்.

அப்போது அங்கு குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் தடுப்புகளை வைத்து காலிஸ்தான் ஆதரவு போராட்டக்காரர்களை தடுத்தனர்.  தொடர்ந்து அமைச்சர் ஜெய்சங்கர் காரில் ஏற சென்றார். அப்போது தடுப்புகளை தாண்டி குதித்து வந்த காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவர் தன் கையில் வைத்திருந்த இந்திய தேசிய கொடியை மிக ஆக்ரோஷத்துடன் கிழிந்தெறிந்தார். அமைச்சர் ஜெய்சங்கரையும் தாக்க முயன்றார். அவரை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் மீதான தாக்குதல் முயற்சிக்கு இந்தியா கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளது.

The post இங்கிலாந்து சென்றுள்ள ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கரை தாக்க காலிஸ்தான் ஆதரவாளர்கள் முயற்சி: இந்தியா கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: