விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க ஏற்பாடு கலெக்டர் தகவல்

சாயல்குடி, மார்ச் 6: மிளகாய், பருத்திக்கு நல்ல விலை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் ,விவசாயிகள் விற்று பயனடைய வேண்டும் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்தார். முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேற்று வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இணைந்து நடத்திய பருத்தி மற்றும் மிளகாய் பயிர் விவசாயிகள், வியாபாரிகள், விஞ்ஞானிகள் மற்றும் துறை அலுவலர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். அவர் கூறும்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் சாகுபடி 1,30,000 எக்டரில் சாகுபடி செய்யப்படும் பிரதான பயிராக உள்ளது. பருத்தி சாகுபடி 10,000 எக்டர் அளவிலும், மிளகாய் பயிர் 18,000 எக்டர் அளவிலும் பயிரிடப்படுகிறது. தற்போதைய விளைச்சலை அதிகப்படுத்த விவசாயிகள் முன்வர வேண்டும்.
விவசாயத்தில் முன்னேற விளையும் ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் வேளாண்மை தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நல்ல மகசூல் பெற வேண்டும். பருத்தி மற்றும் மிளகாய்க்கு நல்ல விலை கிடைப்பதில் உள்ள பிரச்னைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் இந்திய பருத்திக் கழகம், தென்னிந்திய பருத்தி ஆலை உரிமையாளர் கூட்டமைப்பு, அச்சங்குளம் கூட்டுறவு நூற்பாலை மற்றும் வணிகர்களை அழைத்து வந்து கருத்துக்களை கேட்டறிந்து விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் மற்றும் வேளாண் விளை பொருள் வாங்குவோர்கள் இடையே தொடர்புகள் ஏற்படுத்தி இந்த ஆண்டு அறுவடை செய்யப்படும் பருத்தி, மிளகாய்க்கு நல்ல விலை கிடைக்க வழிவகை செய்யப்படும். மேலும் ராமநாதபுரம் அருகே உள்ள எட்டிவயலில் அமைக்கப்பட்ட மிளகாய் குளிர்பதன சேமிப்பு வசதியை பயன்படுத்தி, உரிய விலை கிடைக்கும் போது லாபம் ஈட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் மோகன்ராஜ், நேர்முக உதவியாளர் பாஸ்கரமணியன், வேளாண்மை அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன், தோட்டக்கலை துணை இயக்குநர் ஆறுமுகம், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை கோபால், விற்பனைக்குழு செயலாளர் மல்லிகா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க ஏற்பாடு கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: