கொய்யா கிலோ ரூ.60க்கு விற்பனை

தர்மபுரி, டிச.22: தர்மபுரியில், கொய்யா பழம் கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் மா, புடலை, அவரை, கொய்யா, பப்பாளி, தக்காளி, சீமை கத்தரிக்காய், சாம்பார் பூசணி, தர்பூசணி உள்பட பல்வேறு தோட்டக்கலை பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் கொய்யா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கொய்யாவை பொறுத்தவரை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம் என்பதால், பொதுமக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு உள்ளது. வறட்சி காரணமாக கொய்யா காய்ப்பு குறைந்துள்ளது. தற்போது தொடங்கியுள்ள கொய்யா சீசன் வரும் மே மாதம் முடியும். நடப்பாண்டில் ஒரு கிலோ கொய்யா ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து தர்மபுரி நகரில் தள்ளு வண்டியில் விற்பனை செய்யும் வியாபாரிகள் கூறுகையில், ‘கொய்யாவை மொத்தமாக விவசாயிகளிடம் இருந்து பெறுகிறோம்.

வண்டி வாடகை, தரம் பிரித்தல் காரணமாக பொதுமக்களுக்கு கிலோ ரூ.60 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்தாண்டு தர்மபுரி தவிர கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்தும் தைவான் கொய்யா பழங்கள் விற்பனைக்கு வருகிறது. தற்போது, சீசன் துவங்கியதால் பொதுமக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் வெள்ளை ரக கொய்யா விற்பனைக்கு வருகிறது,’ என்றனர்.

Related Stories: