முன்னதாக, தங்கச்சிமடத்திற்கு தமிழக அரசு சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ ஆகியோர் நேற்று முன்தினம் வந்திருந்தனர். அப்போது பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ‘‘மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து முதல்வரின் அழுத்தத்துடன் டெல்லிக்கு சென்று மீனவர்களின் குறைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். மீனவர்களின் சில கோரிக்கைகள் 10 நாட்களுக்குள் நிறைவேற்றப்படும்’’ என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து நேற்று நடப்பதாக இருந்த மீனவர்களின் தீக்குளிப்பு போராட்டம் ரத்தானது.
இந்நிலையில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு, நீண்டகாலமாக மீட்கப்படாமல் இருக்கும் விசைப்படகுகளுக்கு தற்போது வழங்கப்படும் நிவாரண நிதியை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக நேற்றுமுன்தினம் உயர்த்தி அறிவித்தது. இலங்கை சிறையில் வாடும் மீனவர்களின் குடும்பங்களுக்கு தற்போது நாளொன்றுக்கு வழங்கப்படும் தின உதவித்தொகையையும் ரூ.350ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. தமிழக மீனவர்கள் பிரச்னையை தீர்க்க ஒன்றிய அரசுடன் உரிய பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தெரிவித்தது.
இதனையடுத்து 5ம் நாளான நேற்று மீனவ சங்கப் பிரதிநிதிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண தமிழகத்திலிருந்து எம்பிக்கள், மீன்வளத்துறை அமைச்சர், மீனவ பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழு டெல்லி சென்று, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பிரச்னைக்கு தீர்வு காண அழுத்தம் கொடுப்போம் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மீனவ சங்கங்கள் தயாராக வேண்டும் என்பதால் போராட்டத்தை வாபஸ் பெற்று தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது.
பின்னர் மீனவர்கள் மத்தியில் பேசிய சங்க நிர்வாகிகள், ‘‘ஒன்றிய அரசு இரண்டு வாரத்திற்குள் மீனவர்களை நிபந்தனையின்றி மீட்டு தரவேண்டும். தவறும் பட்சத்தில் மார்ச் 21ம் தேதி ராமேஸ்வரம் தீவு மீனவர்கள் முழுவதும் ஒன்றிணைந்து மண்டபம் ரயில் நிலையத்தில் மாபெரும் ரயில் மறியல் போராட்டத்தை நடத்துவோம். அதற்கும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், புதிய பாம்பன் ரயில் பாலம் திறப்புவிழா எப்போது நடந்தாலும் ஒட்டுமொத்த மீனவர்களையும் ஒன்று திரட்டி பாலத்தை முற்றுகையிட்டு திறப்பு விழாவை தடுத்து நிறுத்துவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்ல உள்ளனர்’’ என தெரிவித்தனர்.
* தமிழக அரசுக்கு மீனவர்சங்கம் நன்றி
மீனவ சங்கத் தலைவர் ஜேசுராஜ் பேசுகையில், ‘‘தமிழக முதல்வரின் அறிவிப்பானது, தொடர்ந்து போராடி வரும் மீனவர்களுக்கு பெரும் ஆறுதலுடன் மகிழ்ச்சியும் அளிக்கிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தொடர்ந்து அக்கறை காட்டும் தமிழக அரசுக்கு ஒட்டுமொத்த மீனவர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றார்.
The post தமிழக அரசின் அறிவிப்புகளை ஏற்று மீனவர்கள் போராட்டம் வாபஸ்: கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய அரசுக்கு 2 வாரம் கெடு; தவறினால் ரயில் மறியல், பாம்பன் பாலம் முற்றுகை என எச்சரிக்கை appeared first on Dinakaran.
