கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரயில் நிலையத்திற்கு அருகில், சுமார் 200 மீ., தொலைவில் ராமநாயக்கன் ஏரி உள்ளது. அப்பகுதியில் புதிதாக லூப் லைன் அமைக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஓசூர் வழியாக கர்நாடக மாநிலத்திற்கும், தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்திற்கும் 20க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூரு பானுசுவாடியில் இருந்து, சேலம் நோக்கி சரக்கு ரயில் ஒன்று வந்தது. இதில் 52 காலி டேங்கர்கள் இருந்தன.
ஓசூர் ரயில் நிலையத்திற்கு முன்னதாக ராமநாயக்கன் ஏரி பகுதியில் வந்தபோது, சரக்கு ரயிலின் 18வது டேங்கர் சக்கரம் திடீரென தடம் புரண்டது. இதையடுத்து, அந்த ரயில் தரை தட்டியவாறு தீப்பொறி பறக்க சிறிது தூரம் சென்றது. அப்போது, ஏற்பட்ட அதிர்ச்சியை உணர்ந்த இன்ஜின் டிரைவர், சாமர்த்தியமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தினார். இதனால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. தகவலின்பேரில், பெங்களூருவில் இருந்து மீட்பு குழுவினர் விரைந்து வந்தனர். தொடர்ந்து தடம் புரண்ட பெட்டியை தூக்கி நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் பெங்களூருவில் இருந்து கோயம்புத்தூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், சுமார் 2 மணி நேரம் தாமதமாக சென்றது.
The post ஓசூர் அருகே சரக்கு ரயில் திடீரென தடம் புரண்டது: வந்தே பாரத் 2 மணி நேரம் தாமதம் appeared first on Dinakaran.
