உச்ச நீதிமன்றத்தில் கோயில் அறங்காவலர்கள் நியமன வழக்கு தள்ளுபடி: தமிழ்நாடு அரசின் கோரிக்கை ஏற்பு

புதுடெல்லி: இந்து தர்மா அமைப்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘தமிழக கோயில்களில் நடைபெறும் முறைகேடுகளை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான கமிட்டி அமைக்க வேண்டும். அதேப்போன்று அனைத்து கோயில்களிகளிலும் அறங்காவலர்களை நியமிக்க வேண்டும் தெரிவித்திருந்தார். இதையடுத்து முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அறங்காவலர் நியமனம் தொடர்பான விவகாரத்தில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக கடந்த டிசம்பர் மாதம் 11ம் தேதி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ராஜேஷ் பிண்டல் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன், ‘‘தமிழ்நாட்டை பொருத்தவரையில் இந்து அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள 31,163 கோயில்களில் 11,982 கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் செய்து முடிக்கப்பட்டு விட்டது. அதேப்போன்று 4843 கோயில்களுக்கு விண்ணப்பம் பெறப்பட்டு நியமனம் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகிறது.மீதமுள்ள கோயில்களுக்கு பலமுறை விளம்பரம் அளித்தும் விண்ணப்பங்கள் எதுவும் வராத நிலை உள்ளது. இதையடுத்து அதுசார்ந்த விண்ணப்பம் வரும் பட்சத்தில் அதனை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என தெரிவித்தார்.இதையடுத்து இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் வாதங்களை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்தனர்.

The post உச்ச நீதிமன்றத்தில் கோயில் அறங்காவலர்கள் நியமன வழக்கு தள்ளுபடி: தமிழ்நாடு அரசின் கோரிக்கை ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: