தங்கச்சிமடத்தில் பிப்.28ம் தேதி மீனவர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். மூன்றாவது நாளான நேற்று கஞ்சி தொட்டி திறந்தனர். அப்போது ராமேஸ்வரம் சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி மீனவர்களை சந்தித்தார். அவர்களிடம் தங்களது கோரிக்கைகளை முறையிட்டனர். இந்நிலையில், போராட்டத்தின் 4வது நாளான இன்று தங்கச்சிமடத்தில் ஒன்றிய அரசைக் கண்டித்து மீனவர்கள் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாளை தீக்குளிக்கும் போராட்டத்தை நடத்துவோம் என அறிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகின்றனர். மீன்பிடி தொழில் மூலம் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு பல கோடி ரூபாய் அந்நிய செலவாணி ஈட்டி தரும் மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு பிரச்னைக்கு நிரந்தர காண ஒன்றிய அரசு முன்வர வேண்டும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரூ.30 கோடி மீன்வர்த்தகம் பாதிப்பு ராமேஸ்வரத்தில் மீனவர்களின் வேலை நிறுத்தம் 8வது நாளாக தொடர்கிறது. இதனால் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த போராட்டத்தால் ரூ.30 கோடி மதிப்பிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சார்பு தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்களின் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தால் பரபரப்பாக காணப்படும் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் முற்றிலும் வெறிச்சோடிக் காணப்படுகிறது. தொடர் வேலைநிறுத்தம், காத்திருப்பு போராட்டத்தால் ராமேஸ்வரம் தீவு பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post தங்கச்சிமடத்தில் ஒன்றிய அரசைக் கண்டித்து: மீனவர்கள் திருவோடு ஏந்தி போராட்டம்: வேலைநிறுத்தத்தால் ரூ.30 கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு appeared first on Dinakaran.
