பனிமூட்டப் பிடியில் ‘மலைகளின் இளவரசி’: பகலிலேயே வாகன விளக்குகள் பளிச்

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் நிலவும் அடர் பனிமூட்டம் காரணமாக, வாகன ஓட்டிகள் சிரமமடைந்து பகலிலே முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்களை இயக்கி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதல் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.

நேற்றும் காலை முதலே கொடைக்கானல் மலைப்பகுதியில் அடர் பனி மூட்டம் காணப்பட்டது. குறிப்பாக ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், அப்சர்வேட்டரி, உகார்தே நகர், சீனிவாசபுரம், கவி தியாகராஜர் சாலை, பேருந்து நிலையம், லாஸ்காட் சாலை, கல்லுக்குழி உள்ளிட்ட ப‌ல்வேறு பகுதிகளிலும், வ‌த்த‌ல‌க்குண்டு, ப‌ழ‌நி பிர‌தான‌ ம‌லைச்சாலைகளிலும் அடர் பனி மூட்டம் நிலவியது.

இதன் காரணமாக பகலே இரவு போல் காணப்பட்டதால் வாகனஓட்டிகள் சிரமமடைந்து முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி மலைச்சாலைகளில் வாக‌ன‌ங்க‌ளை ஊர்ந்த நிலையிலே இயக்கினர். மேலும் சில‌ இட‌ங்க‌ளில் எதிரே வ‌ருப‌வ‌ர்க‌ள் கூட‌ தெரியாத‌ நிலையே காண‌ப்ப‌ட்டதால் அனைத்து கடைகளிலும் பகலிலே விளக்குகள் எரியவிடப்பட்டன. மேலும் அட‌ர்ந்த‌ ப‌னிமூட்டம் தொடர்வதால் கொடைக்கானல் ம‌லைப்ப‌குதி முழுவ‌தும் க‌டும் குளிரும் நில‌வுகிற‌து.

The post பனிமூட்டப் பிடியில் ‘மலைகளின் இளவரசி’: பகலிலேயே வாகன விளக்குகள் பளிச் appeared first on Dinakaran.

Related Stories: