கிருஷ்ணகிரி, பிப்.28: வாகனத்தின் பதிவில் செல்போன் எண்ணை இணைக்க, செல்போன் எண் குறிப்பிடப்பட்டுள்ள ஆதார் அட்டையின் நகலை, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம்.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
போக்குவரத்து துறையில் அனைத்து பணிகளும் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. மக்கள் எளிதில் அறியும் வண்ணம், இணையதளத்தில் அனைத்து விவரங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்த கணினி அவசியம் என்பதை மாற்றி, செல்போன் மூலமே எல்லா வகையான பணிகளையும் மேற்கொள்ளும் எளிய வழிமுறைகள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் எந்த வகையான மோட்டார் வாகனங்கள் வைத்திருந்தாலும், அவ்வாகனத்தின் அடிப்படை விவரங்களை, அதாவது வரி செலுத்திய விவரம், காப்புச் சான்றின் முடிவு தேதி, தகுதிச் சான்றின் முடிவு தேதி மற்றும் புகைச்சான்று முடிவு தேதி என அனைத்து விவரங்களையும் செல்போன் மூலமே அறியலாம்.
இதுபோன்ற பயன்கள் பெற, வாகன உரிமையாளர்கள் தங்களது செல்போன் எண்ணை, அவர்கள் பெயரில் உள்ள வாகனப்பதிவில் சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்க்கப்பட்டால், அவ்வாகனம் குறித்த பணிகள் நடைபெறும் போது, அவ்வப்போது குறுந்தகவல்கள் வரும். வாகன உரிமையாளர்கள், தங்களது வாகனத்தின் பதிவில், செல்போன் எண்ணை இணைக்க, வாகன பதிவுச் சான்றின் நகல் மற்றும் வாகன உரிமையாளரின் செல்போன் எண் குறிப்பிடப்பட்டுள்ள முழு விவரம் கொண்ட ஆதார் அட்டை நகலினை, அலுவலக வேலை நாட்களில் தங்களது முகவரி எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ஆர்டிஓ ஆபிஸ்களில் வாகனத்தின் பதிவில் செல்போன் எண் இணைக்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.
