சென்ற இதழின் தொடர்ச்சி…
அஸ்வாரூடா அதிஷ்டித அச்வ கோடி கோடிபி ஆவ்ருதா
இப்போது உள்முகமாக திரும்பக் கூடிய இந்திரியங்கள் என்று சொல்கிறோமே… இது கர்மேந்திரியங்கள் ஞானேந்திரியங்கள் மட்டும்தானா. கர்மேந்திரியம் ஞானேந்திரியம் மட்டுமல்ல. அந்த கர்மேந்திரிய ஞானேந்திரியங்களால் நாம் செய்யக் கூடிய ஒவ்வொரு செயலும் இருக்கிறதல்லவா… அந்த ஒவ்வொரு செயலும் ஒரு குதிரை. அதனால்தான் இந்த நாமத்தில் அஸ்வ கோடி கோடி ஆவ்ருதா என்று சொல்லியிருக்கிறார்கள்.
நம்முடைய இந்திரியங்களால் என்னென்ன செயல்கள் நடக்கின்றது என்று நினைத்தால், அதெல்லாம் எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டது. நாம் ஒரு நாளில் விழிப்பு முதல் இரவு தூக்கம் வரைக்கும் எத்தனை செயல்கள் நடக்கின்றது என்பதே நம்மால் எண்ண முடியாது. இதையும் தாண்டி தூக்கத்தில், சொப்பனத்தில் என்ன நடக்கின்றது என்றும் தெரியாது. அப்போது, ஜாக்ரத் என்கிற விழிப்பிலேயே எத்தனை செயல்கள் என்றும் தெரியாது. சொப்பனம் என்கிற கனவிலும் எண்ணிலடங்கா செயல்களாகும். இப்போது இந்திரியங்களினுடைய செயல்களை நம்மால் எண்ணவே முடியாது. அதனால், இந்த இந்திரியங்களுடைய செயல்கள்தான் இங்கு குதிரைகளாக இருக்கிறது. அதுதான் அஸ்வ கோடி கோடி… கோடி கோடி குதிரைகள்.
இப்படி நடக்கக் கூடிய செயல்களுக்கெல்லாம் தலைமை இடத்தில் இருப்பது எதுவென்று பார்த்தால், நம்முடைய மனமே ஆகும். இந்த, மனம் செயல்பட்டால்தான் இந்திரியம் செயல்படும். இப்போது இந்த மனம் யார் தெரியுமா… அஸ்வாரூடா அமர்ந்திருக்கும் குதிரைதான் இந்த மனசு. அஸ்வாரூடா ஏறியிருக்கிறாள் அல்லவா ஒரு குதிரைமீது. அந்தக் குதிரைதான் நம்முடைய மனசு. இந்த கோடி கோடி இந்திரிய விஷயங்களுக்கெல்லாம் தலைமைப் பொறுப்பில் இருக்கிறது அந்த குதிரை. அந்த குதிரைக்கு அபராஜிதம் என்று பெயர். அபராஜிதம் என்றால் யாராலும் வெல்லப்பட முடியாதது.
ஆனால், இங்கு ஒரு விஷயத்தை பார்க்கிறோம். இந்த அஸ்வாரூடா மீது கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறாள் அல்லவா. யாராலும் வெல்லப்பட முடியாததுதானே அபராஜிதம். ஆனால், அந்த அபராஜிதம் அவளுடைய கைக்கு வசபட்டிருக்கிறதல்லவா? யாராலும் வெல்லப்பட முடியாத அபராஜிதம் என்கிற குதிரையை லகான் போட்டு நிறுத்தியிருக்கிறாளே… இந்த அஸ்வாரூடா.
இப்போது ஒரு விஷயத்தை நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டும். அபராஜிதம் என்பது நம்முடைய மனது. இது வெளிமுகமாகப் போனால் யாராலும் வெல்ல முடியாது. அந்தர்முகமாகப் போனால் இந்த மனக் குதிரையை அஸ்வாரூடா என்கிற அம்பிகை லகான் போட்டு நிறுத்துவாள். அப்படி நிறுத்தும்போதுதான் உண்மையில் அம்பிகைக்கு அஸ்வாரூடா என்கிற பெயர் வருகின்றது என்றும் கொள்ளலாம்.
சரி, அப்படி அஸ்வாரூடாவாக மனக் குதிரையை நிறுத்திகிறாள் அல்லவா… அப்படி நிறுத்துகிற அஸ்வாரூடா யார்? கோடி கோடி விஷயங்கள் இந்திரிய விஷயங்கள் என்று பார்த்து விட்டோம். இவற்றிற்கெல்லாம் தலைமைப் பொறுப்பில் இருப்பது மனசு என்கிற குதிரை என்றும் பார்த்து விட்டோம். இந்த மனமெனும் அபராஜிதத்தை யாராலும் வெல்ல முடியாது என்றும் பார்த்து விட்டோம். யாராலும் வெல்ல முடியாத குதிரையை லகான் போட்டு நிறுத்தக் கூடியவள் அஸ்வாரூடா என்கிற அம்பாள் என்பதையும் பார்த்தோம்.
இந்த அஸ்வாரூடா என்கிற அம்பிகை யாரெனில், நமக்குள் இருக்கக் கூடிய பிராண சக்தியே ஆகும். நமக்குள்ளே இருக்கக் கூடிய பிராண சக்திதான் அஸ்வாரூடா என்கிற அம்பாள்.
நம்முடைய பிராண பிரதிஷ்டை என்கிற மந்திரத்தில், அந்த பிராண சக்தியினுடைய தியான ஸ்லோகம் வரும். அதில் பிராண சக்தி பராநஹா… என்று வரும். பிராண சக்தியாக இருக்கக் கூடியவள் யாரெனில், பரா… பரையாக இருக்கக் கூடிய அம்பிகைதான் நமக்குள் பிராண சக்தியாக இருக்கிறாள். அந்த பிராண சக்திக்குத்தான் அஸ்வாரூடா என்று பெயர். அந்த பிராண சக்திதான் நம்முடைய மனசை லகான் போட்டு நிறுத்தும். இப்படி மனசை லகான் போட்டு நிறுத்தும்போது என்ன ஆகுமெனில், இப்படி கோடி கோடியான இந்திரிய விஷயங்களும் உள்நோக்கித் திரும்பி விடும். அது லகான் போடாத வரையிலும் கோடி கோடி விஷயங்களும் வெளி நோக்கி போய்க் கொண்டே இருக்கும். மனசும்… அபராஜிதமும்… வெளிநோக்கியே போகும். அதனால்தான் நம்மை யாராலும் வெல்ல முடியாது என்று நினைத்துக் கொள்ளும். தன்னையே தான் வென்று கொள்ள முடியாது என்கிற முடிவுக்கு வந்து விடும். அதை வெல்வதற்கு ஒரு சக்தி இருக்கிறது. அந்த சக்தியே பிராண சக்தி. அந்த பிராண சக்தியாக இருக்கக் கூடியவளே சாட்சாத் பரதேவதை.
மீண்டும் சொல்கிறேன். பரா என்கிற அம்பிகை அங்கு பிராண சக்தியாக வந்து, அபராஜிதம் என்கிற குதிரையை லகான் போட்டு நிறுத்தும்போது கோடி கோடியான இந்திரிய விஷயங்கள் உள்நோக்கித் திரும்புகிறது. அப்படி உள்நோக்கி திரும்பி யாரை நோக்கி சேவிக்கிறார்களெனில், அங்கு மஹா ராணியாக இருக்கக் கூடிய, ஆத்ம சொரூபமாக இருக்கக் கூடிய லலிதா மகாதிரிபுரசுந்தரியை உள்நோக்கி சேவிக்கிறார்கள்.
இதற்கு முந்தைய நாமாவில் இந்த இந்திரியங்களுக்கான பலம், இந்த இந்திரியங்களுக்கான விஷயம் இது இரண்டும் எப்படி சம்பத்கரீ மூலமாக நடக்கின்றது என்று பார்த்தோம். இந்த நாமாவில் அந்த இந்திரியங்களுக்கான வேகம்… இந்திரியங்களுக்கான தலைமைப் பொறுப்பில் இருக்கக் கூடிய மனசு. அந்த மனசை அதிஷ்டானமாக வைத்திருக்கக் கூடிய பிராண சக்தி. அந்த பிராண சக்தியாக இருக்கக் கூடிய அஸ்வாரூடா… எப்படி நமக்குள் சேவை சாதிக்கிறாள். எப்படி வேலை செய்கிறாள் என்பதுதான் இங்கு விஷயம்.
(சுழலும்)
The post மனக்குதிரையை அடக்கும் நாமம் appeared first on Dinakaran.
