பணி அமைப்பில் நிர்வாக நலன் கருதி வட்டாட்சியர்கள் அதிரடி மாற்றம்: உடனே பணியில் சேர கலெக்டர் எச்சரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் அதிரடி மாற்றம் செய்யப்பட்ட நிலையில் உடனடியாக புதிய பணியிடத்தில் சேரவேண்டும், ஏதேனும் கால தாமதம் செய்தால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மு.பிரதாப் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலகில் வட்டாட்சியர் பணி அமைப்பில் நிர்வாக நலன் கருதி நேற்றுமுன்தினம் மாறுதல்கள் மற்றும் நியமனம் செய்து மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, பூந்தமல்லி சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக இருந்த பி.சரஸ்வதி – பூந்தமல்லி வட்டாட்சியராக இருந்த ஆர்.கோவிந்தராஜூக்கு பதிலாக புதிய வட்டாட்சியராகவும், பூந்தமல்லி வட்டாட்சியராக இருந்த ஆர்.கோவிந்தராஜ் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் (ஆர்பிட்ரேஷன்) வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிலம் ‘ஆ’ மற்றும் ‘என்’ பிரிவுகளில் கூடுதல் பொறுப்பாக கவனிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் (ஆர்பிட்ரேசன்) வட்டாட்சியராக இருந்த ஜி.காந்திமதி பூந்தமல்லி சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக பி.சரஸ்வதிக்கு பதிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கோயம்பேடு சிஎம்டிஏவில் சென்னை வெளிவட்ட சாலை திட்ட அலகு 4ல் தனி வட்டாட்சியராக இருந்த தே.பாரதி பள்ளிப்பட்டு வட்டாட்சியராக நியமிக்கப்ட்டுள்ளார். மேலும் பி.எல்.மலர்விழி என்பவருக்கு வழங்கப்பட்ட ஆணையை ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு சிஎம்டிஏ சென்னை வெளிவட்ட சாலை திட்ட அலகு 5ல் தனி வட்டாட்சியராக இருந்த பி.பிரேமி, சென்னை கோயம்பேடு சிஎம்டிஏ சென்னை வெளிவட்ட சாலை திட்டம் அலகு 4ல் முழு கூடுதல் பொறுப்புடன் தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் திருமழிசை டாஸ்மாக் (கிடங்கு 1) தனி வட்டாட்சியராக இருந்த ப.கோமதி, திருவள்ளூர் மேற்கு மாவட்டம் கலால் மேற்பார்வை அலுவலர் மதுபானக் கிடங்கின் தனி வட்டாட்சியராக இருந்த எம்.வெங்கடேஷூக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மேற்கு மாவட்டம் கலால் மேற்பார்வை அலுவலர் தனி வட்டாட்சியர் எம்.வெங்கடேஷ், திருமழிசை தனி வட்டாட்சியராக இருந்த ப.கோமதிக்கு பதிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பணியிட மாற்றம் மற்றும் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ள வட்டாட்சியர்கள் உடனடியாக புதிய பணியிடத்தில் சேரவேண்டும். ஏதேனும் கால தாமதம் செய்தால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மு.பிரதாப் எச்சரித்துள்ளார்.

The post பணி அமைப்பில் நிர்வாக நலன் கருதி வட்டாட்சியர்கள் அதிரடி மாற்றம்: உடனே பணியில் சேர கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: