ஆவடி ஒன்றிய அரசு அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபரால் பொதுமக்கள் அச்சம்

ஆவடி: ஆவடி ஒன்றிய அரசு அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள மர்ம நபரால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆவடி, எச்.வி.வி.எப். சாலையில் ஒன்றிய அரசின் கனரக வாகனங்கள் தயாரிப்பு தொழிற்சாலை மற்றும் இஞ்ஜின் தயாரிப்பு தொழிற்சாலையின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு 134 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த அலுவலகத்திற்கு கடந்த 14ம் தேதி, வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், பிற்பகல் 2.55 மணி அளவில் வெடிக்கும் எனவும் மர்ம நபர் மின்னஞ்சல் வாயிலாக மிரட்டல் விடுத்திருந்தார்.

ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தபோது, அது வெறும் புரளி என தெரிந்தது. இந்நிலையில், நேற்று முன் தினம் காலை அந்த மர்ம நபரிடம் இருந்து இரண்டாவது முறையாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில், ‘வெடிகுண்டு அங்கேதான் இருக்கிறது, நீங்கள் சரியாக சோதனை செய்யவில்லை. காலை 11 மணிக்கு குண்டு வெடிக்கும் என’ குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஊழியர்கள் மாலையில்தான் இந்த மின்னஞ்சலை பார்த்துள்ளனர். ஆனால், மர்ம நபர் சொன்னது போல் குண்டு வெடிக்கவில்லை.

இதையடுத்து புகாரின்படி, இரவில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அலுவலகத்தை சோதனை செய்ததில் மீண்டும் இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. இந்தியாவில் மிகவும் முக்கியமான பாதுகாப்பு துறையான கனரக வாகனங்கள் தயாரிப்பு தொழிற்சாலை மற்றும் இஞ்ஜின் தயாரிப்பு தொழிற்சாலையின் தலைமை அலுவலகத்திற்கு கடந்த 14ம் தேதி வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதில் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட சைபர் கிரைம் போலீசார் இதுவரை மர்மநபரை கண்டு பிடிக்காதது பணியாளர்கள், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post ஆவடி ஒன்றிய அரசு அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபரால் பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: