இதை அறிந்த ஜெயலட்சுமி பெத்திக்குப்பம் மேம்பாலம் அருகே உள்ள வர்மா கிளினிக்குக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பிரநீத்வர்மா என்ற டாக்டர் குழந்தையை பரிசோதனை செய்த பின்பு அவருக்கு இரண்டு நாட்களுக்கு மூன்று மருந்துகள் எழுதி கொடுத்துள்ளார். அதில் மூன்று வேளைக்கும் 7.5 எம்.எல். சிரப் கொடுக்க வேண்டும் என அட்டையில் எழுதியிருந்தார். இதை பெற்றோர்கள் ஒரு நாள் முழுவதும் குழந்தைக்கு ஊற்றியுள்ளனர்.
மறுநாள் காலை குழந்தை அசைவில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த பெற்றோர் மீண்டும் அதே கிளினிக்குக்கு சென்றபோது டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனை கொண்டு செல்லுங்கள் என அறிவுறுத்தியுள்ளனர். அதன் பின்பு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவசரஅவசரமாக கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தையை அனுமதித்தனர்.
இந்த நிலையில் குழந்தையை நேற்று முழுமையாக பரிசோதனை செய்ததில் அதிகளவில் மருந்து கொடுக்கப்பட்டது காரணமாக வயிற்றில் உள்ள கல்லீரல், குடல் போன்றவை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனைப் போக்கும் வகையில் மாற்று மருந்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அழுதுகொண்டே வர்மா கிளினிக் முன்பு உறவினர்களுடன் நேற்று குவிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது டாக்டரிடம் கேட்டபோது, அவர் தெனாவட்டாக பதில் கூறியதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு விரைந்து வந்த சிப்காட் போலீசார் முறையாக காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய பின்னர் அனைவரும் கலைந்து சென்று புகார் மனு அளித்தனர்.
இதுபற்றி அரசு மருத்துவர்கள் கூறுகையில், இரண்டு வயது குழந்தைக்கு காய்ச்சல் என்றால் 3 எம்எல் மருந்து மட்டுமே கொடுக்க வேண்டும். அதிகமாக கொடுத்தால் வயிற்றில் உள்ள அனைத்து பகுதிகளையும் அது சேதப்படுத்திவிடும் என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
The post கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு அளவுக்கு அதிகமாக கொடுத்த மருந்தால் 2 வயது பெண் குழந்தை கவலைக்கிடம்: தனியார் மருத்துவமனை முற்றுகை appeared first on Dinakaran.
