பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் கட்டண கழிப்பறை சீரமைப்பு

பூந்தமல்லி: பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட கட்டண கழிப்பறையை நகர்மன்ற தலைவர் திறந்து வைத்தார். சென்னையின் முக்கிய புறநகர் பகுதியான பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் பயணிகளின் இயற்கை உபாதைக்காக கட்டண கழிப்பிடம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த கழிப்பிட கட்டிடம் சேதம் அடைந்தும், போதிய வசதிகள் இன்றியும் சுகாதாரமில்லாமல் கிடந்தது. இதுகுறித்து பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இந்த கழிப்பறையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. மேலும் பேருந்து நிலையத்தில் மற்றொரு பகுதியில் புதிதாக கட்டணக் கழிப்பிடமும் திறக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சேதம் அடைந்திருந்த பழைய கட்டணக் கழிப்பிடம் ரூ.5 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது. இதனை நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் நகர்மன்ற துணைத் தலைவர் ஸ்ரீதர், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, பொறியாளர் ஜெயக்குமார், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், சுகாதார ஆய்வாளர் ஐயப்பன், நகர்மன்ற உறுப்பினர்கள் செந்தாமரை நெல்சன், நீலாவதி ஐயப்பன், தாமரைக்கண்ணன், மற்றும் திமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் கட்டண கழிப்பறை சீரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: