ரூ.10 ஆயிரம் கேட்டு மிரட்டி பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய தவெக நிர்வாகி: சிசிடிவி காட்சி வைரல்

பல்லாவரம்: திருநீர்மலை பிரதான சாலையை சேர்ந்தவர் இளங்கோ (38). இவர், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில், திருநீர்மலை பகுதி பொருளாளராக உள்ளார். இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் ஒன்றில் அடிக்கடி தனது வாகனத்திற்கு பெட்ரோல் போட்டு வந்ததால், அங்குள்ள ஊழியர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை வைத்து, அந்த பெட்ரோல் பங்க்கில் அடிக்கடி தனது கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்து, ரூ.200 மற்றும் ரூ.300 என்று பணமாக பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இந்த பெட்ரோல் பங்க்கிற்கு வந்த இளங்கோ, அங்கு பணியில் இருந்த ரஞ்சித் (32) என்பவரிடம், ‘‘தனக்கு அவசரமாக ரூ.10,000 தேவைப்படுகிறது. கல்லா பெட்டியில் இருந்து எடுத்துக் கொடு,’’ என்று கூறியுள்ளார். அதற்கு ஊழியர் ரஞ்சித், உரிமையாளருக்கு தெரியாமல் அவ்வளவு பணத்தை கொடுக்க முடியாது, என்று கூறியுள்ளார். அதற்கு, ரூ.3 ஆயிரமாவது உடனே கொடு, என்றுள்ளார். தன்னிடம் பணம் ஏதும் இல்லை, என ரஞ்சித் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆத்திரமடைந்த இளங்கோ, அவரை காலால் எட்டி உதைத்து, சரமாரியாக தாக்கி, ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள், இளங்கோவை தடுக்க முயன்றபோது, அவர் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர், தாக்குதலில் காயமடைந்த ஊழியர் ரஞ்சித்தை சக ஊழியர்கள் மீட்டு, வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சங்கர் நகர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து, தப்பிச் சென்ற தவெக கட்சி நிர்வாகியான இளங்கோவை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தவெக நிர்வாகி இளங்கோ, பெட்ரோல் பங்க் ஊழியர் ரஞ்சித்தை தாக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post ரூ.10 ஆயிரம் கேட்டு மிரட்டி பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய தவெக நிர்வாகி: சிசிடிவி காட்சி வைரல் appeared first on Dinakaran.

Related Stories: