புழல், ஆர்.கே.பேட்டை கோயில்களில் பெண்கள் பால்குட ஊர்வலம்

புழல்: சென்னை புழல் ஒற்றவாடை தெருவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் வள்ளி தெய்வ சேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோயில் அமைந்துள்ளது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, நேற்று இக்கோயில் சார்பில் புழல் பாலாஜி நகரில் உள்ள ஸ்ரீ ஏக வள்ளியம்மன் கோயிலில் இருந்து 1008 பெண்கள் பால்குட ஊர்வலம் வந்தனர். தலையில் பால் குடங்களை சுமந்து, காந்தி பிரதான சாலை ஒற்றவாடை தெரு வழியாக கோயிலுக்குச் சென்று, மூலவருக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர், 1000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தைப்பூச விழாவில் மாதவரம் தொகுதி எம்எல்ஏ சுதர்சனம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இதேபோல் ஆர்.கே.பேட்டையில் உள்ள பொன்னியம்மன் கோயிலில் 30ம் ஆண்டு தைப்பூச விழாவை முன்னிட்டு 108 பால்குட ஊர்வலம் மற்றும் குத்துவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது.

விழாவையொட்டி, காலை 7 மணிக்கு கணபதி பூஜை, 11 மணிக்கு ஆர்.கே.பேட் டை ஸ்ரீகோதண்ட ராமர் கோயிலில் இருந்து 108 பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் பெண்கள் பால்குடங்களை திருத்தணி சாலை, தபால் நிலையம் தெரு, ஆர்.கே.பேட்டை பஜார் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு விழியாக கோயிலை வந்தடைந்த பின் பாலபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, 11.30 மணிக்கு அம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. பின்னர், 12 மணிக்கு அன்னதானமும், மாலை 5 மணிக்கு விளக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு வாண வேடிக்கையும் நடந்தது.

விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர். பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் கிராமத்தில் உள்ள பாலசுப்பிரமணியர் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு 1,008 பால்குடம் எடுத்து பெண்கள் வழிபாடு செய்தனர். ஆண்டார்குப்பம் கிராமத்தில் இருந்து முருகன் கோயிலுக்கு மேளதாளம் முழங்க பெண்கள் தலையில் பால்குடங்களை சுமந்து கோயிலுக்கு வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று ஆண்டார்குப்பம் முருகன் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

The post புழல், ஆர்.கே.பேட்டை கோயில்களில் பெண்கள் பால்குட ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: