ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தாயார் ராப்பத்து உற்சவம் துவக்கம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தாயார் ராப்பத்து உற்சவம் நேற்று மாலை துவங்கியது.பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுமுழுவதும் பல்வேறு உற்சவங்கள், திருவி ழாக்கள் நடைபெற்று வருகின்றன. மார்கழி, தை மாதங்களில் பகல்பத்து, ராப்பத்து என 20 நாட்கள் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு வாய்ந்ததாகும். ஆழ்வார்களால் பாடப்பட்ட திவ்யபிரபந்தத்தில் உள்ள நாலாயிரம் பாசுரங்களையும் இந்த திருவிழா நாட்களில் பெருமாள் முன் அரையர்கள் அபிநயத் தோடு பாடுவர். தாயாருக்கு இந்த உற்சவத்தில் எவ்வித பங்கேற்பும் இல்லை. இதனால் பெருமாளுக்கு நடத்தியதை போல் தாயாருக்கு தனியாக 10 நாள் திருவத்யயன உற்சவம் நடத்தும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி ரங்கநாயகி தாயார் திருவத்யயன உற்சவத்தின் திருமொழித்திரு நாள் (பகல் பத்து உற்சவம்) கடந்த 21ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெற்றது. ராப்பத்து உற்சவம் நேற்றிரவு துவங்கியது. வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து நேற்று மாலை 5 மணிக்கு ரங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு திருவாய்மொழி மண்டபம் வந்தடைந்தார். அங்கு அலங்கார கோஷ்டி வகையறா கண்டருளினார். பின்னர் இரவு 8.45 மணியளவில் திருவாய்மொழி மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 9.45மணியளவில் வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

The post ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தாயார் ராப்பத்து உற்சவம் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: