முதலில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்திற்கு சென்று முதல்வர் சந்திரபாபு நாயுடு கள ஆய்வு செய்தார். பின்னர் மருத்துவமனைக்கு சென்று கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து தேவஸ்தான நிர்வாக அலுவலக கட்டிடத்திற்கு வந்த முதல்வர் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி? என்பது முதல் அனைத்து விவரங்களையும் கேட்டறிந்தார்.
பின்னர் திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் நிருபர்களிடம் முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: புனிதமான திருப்பதியில் நெரிசலில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் கவலை அளிக்கிறது. இது போன்ற சம்பவம் வேறு எந்த மாநிலத்திலும் நடைபெறக்கூடாது என்பதற்காகவும், எதனால் இந்த விபத்து நடைபெற்றது என்பது குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். நீதி விசாரணையின் அறிக்கையின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். அறங்காவல் குழு தலைவர் மற்றும் செயல் அதிகாரி மேலும் ஒருங்கிணைப்புடன் பணிபுரிய வேண்டும். உறுப்பினர்கள் அனைவரும் சேவை மனப்பான்மையுடன் சேவை செய்ய வேண்டும்.
எந்த ஒரு விஐபியாக இருந்தாலும் கடவுளுக்கு முன்பு சாதாரணமாக இருக்க வேண்டும். யாராக இருந்தாலும் தவறு செய்து தப்பித்து விடலாம் என்று நினைக்க வேண்டாம். அரசு மற்றும் அதிகாரிகளிடமிருந்து தப்பித்து விடலாம் ஆனால் ஏழுமலையானிடமிருந்து தப்பிக்க முடியாது. ஏற்கனவே அவரை வட்டி காசுலவாடா என அழைப்பது வழக்கம். அவரிடம் வைத்துக் கொண்டால் இந்த ஜென்மத்திலேயே அவர்கள் தங்களது செயலுக்கு ஏற்ப தண்டனையை அனுபவிப்பார்கள். இதனை நானே பலரை நேரில் கண்டு உணர்ந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
சடலம் வாங்க மறுப்பு: சேலத்தை சேர்ந்த மல்லிகா என்பவர் ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், டோக்கன் பெற வரிசையில் காத்திருக்கும்போது மயங்கி விழுந்ததாகவும், அவரை மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் இறந்துவிட்டதாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த மல்லிகாவின் உறவினர்கள், திருப்பதிக்கு வந்தபோது நல்ல உடல்நலத்துடன் இருந்தார். கூட்ட நெரிசலில் சிக்கி 150 பேர் மல்லிகா மீது ஏறியதால், உடலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக மருத்துவமனையில் அறிக்கை கொடுத்துள்ளனர். ஆனால் நீங்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்று வழக்குப்பதிவு செய்துள்ளீர்களே என்று போலீசாரிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மல்லிகாவின் சடலத்தை வாங்க உறவினர்கள் மறுத்தனர். அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடந்த பிறகு மனைவி மல்லிகா உயிரிழந்தது குறித்து தவறான அறிக்கையை வெளியிட்ட போலீசாரை கண்டித்து பேசிவிட்டு சடலத்தை வாங்கி சென்றனர்.
* உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம்
உயிரிழந்த கோயம்புத்தூரை சேர்ந்த நிர்மலா, சேலத்தை சேர்ந்த மல்லிகா, விசாகப்பட்டினத்தை சேர்ந்த லாவண்யா, சாந்தி, ரஜினி, நரசிப்பட்டினத்தை சேர்ந்த நாயுடு பாபு ஆகிய 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். மேலும் இறந்த குடும்பத்தினருக்கு தேவஸ்தானத்தில் ஒப்பந்த பணி வழங்கப்படும். தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தமிழகத்தில் வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கான செலவுகளை தேவஸ்தானமே ஏற்கும்.
* டிஎஸ்பி, கோசாலை இயக்குனர் அதிரடி சஸ்பெண்ட்
மேலும் முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்தில் அலட்சியமாக பணிபுரிந்த டிஎஸ்பி ரமண குமார், அங்கு பொறுப்பாளராக இருந்த கோசாலை இயக்குனர் ஹரிநாத் ரெட்டி ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். திருப்பதி எஸ்.பி. சுப்பராயுடு, தேவஸ்தானம் இணை செயல் அதிகாரி கவுதமி, தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பாளர் தர் ஆகியோர் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என்றார்.
* கொரோனாவில் குழந்தைகளை, இப்போது மனைவியை இழந்தேன்
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான மல்லிகாவின் கணவர் கிருஷ்ணன்(55) மேச்சேரி பேரூராட்சி டேங்க் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். மாதந்தோறும் இந்த கிராம மக்களுடன் மல்லிகா திருப்பதி சென்று வருவது வழக்கம். இதுகுறித்து கிருஷ்ணன் கூறுகையில், ‘சேலத்தில் இருந்து ரயிலில் திருப்பதி வந்தோம். நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு இலவச டிக்கெட் கவுன்டர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் வரிசையில் காத்திருந்தோம். கவுன்டர் திறந்தபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி என் மனைவி இறந்துவிட்டார். கொரோனாவின்போது குழந்தைகளை இழந்த நான், இப்போது என் மனைவியையும் இழந்துவிட்டேன், என்றார்.
The post திருப்பதியில் தமிழகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் பலி நீதி விசாரணை நடத்த உத்தரவு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி appeared first on Dinakaran.