பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடிகர் மோகன் பாபுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மோகன் பாபுவுக்கும், அவரது மகன் மனோஜ் மஞ்சுவுக்கும் சொத்து தகராறு காரணமாக ஏற்பட்ட கைகலப்பில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதன் தொடர்ச்சியாக மோகன் பாபு வீட்டுக்குள் நுழைய முயன்ற அவரது மகன் மனோஜ் மஞ்சுவை பாதுகாவலர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. இதன் காரணத்தினால் வெளியில் காத்திருந்த அவர் பேட்டி அளிக்க பத்திரிக்கையாளர்களை அழைத்துள்ளார்.

அப்போது பேட்டி எடுக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் மீது நடிகர் மோகன் பாபு தாக்குதல் நடத்தியதில், தனியார் செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மேற்கண்ட விவகாரத்தில் பத்திரிக்கையாளர்கள் வழங்கிய புகாரின் பெயரில் மோகன் பாபு மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து வழக்கில் இருந்து தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மோகன்பாபு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும், தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று மோகன் பாபு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுதன்சு துலியா மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மோகன் பாபு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘‘காயமடைந்த பத்திரிக்கையாளரிடம் நடிகர் மோகன் பாபு மன்னிப்பு கேட்கவும், அதேநேரத்தில் அவருக்கான நஷ்ட ஈடு வழங்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக கூறிய நீதிபதிகள், ‘‘அதுவரை நடிகர் மோகன் பாபுவுக்கு எதிராக கட்டாய நடவடிக்கை எடுக்கக் கூடாது’’ என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

The post பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடிகர் மோகன் பாபுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: