மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 4 நாள் கட்டுக்கடங்காமல் குவியும் பக்தர்கள்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மகரவிளக்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் வரும் 14ம் தேதி நடைபெறுகிறது. மகரவிளக்கு கால பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்ட 30ம் தேதி மாலை முதல் சபரிமலையில் பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். 31ம் தேதி முதல் தினமும் சராசரியாக 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்து வருகின்றனர். சில நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தையும் தாண்டியது.

மண்டல காலத்தில் 32.50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். மகரவிளக்கு பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டு நேற்று (9ம் தேதி) இரவு வரை 11 நாட்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். மண்டல, மகரவிளக்கு காலத்தில் இதுவரை தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 42 லட்சத்தை தாண்டியுள்ளது. இதற்கிடையே மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருப்பதால் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால் நெரிசல் ஏற்படாமல் இருக்க நேற்று முதல் ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. 13ம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை 50 ஆயிரமாகவும், 14ம் தேதி 40 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 15ம் தேதி (14ம் தேதி தவிர) வரை உடனடி முன்பதிவு எண்ணிக்கை 10 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. 14ம் தேதி உடனடி முன்பதிவு எண்ணிக்கை 1000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

உடனடி முன்பதிவு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ள போதிலும் ஆன்லைனில் இடம் கிடைக்காத பெரும்பாலானோர் இதில் முன்பதிவு செய்து தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் தினமும் உடனடி முன்பதிவு எண்ணிக்கை 20 ஆயிரம் முதல் 22 ஆயிரம் வரை உள்ளது. இதற்கிடையே பம்பையில் நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக நேற்று முதல் உடனடி முன்பதிவு கவுண்டர்கள் நிலக்கல்லுக்கு மாற்றப்பட்டுள்ளது.

* மகரவிளக்கு பூஜைக்கு மறுநாளும் (15ம் தேதி) நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் அன்று மாலை 3 மணிக்கும் 5 மணிக்கும் இடையே ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மாலை 6 மணிக்குப் பின்னர் தரிசனத்திற்கு வரவேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.

* 15ம் தேதி முதல் உடனடி முன்பதிவு கவுண்டர்கள் காலை 11 மணிக்குப் பின்னர் மட்டுமே செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 4 நாள் கட்டுக்கடங்காமல் குவியும் பக்தர்கள் appeared first on Dinakaran.

Related Stories: