டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சிக்கு அகிலேஷ், மம்தா, உத்தவ் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜ, காங்கிரஸ் கட்சிகள் தனித்து களம் காண்கின்றன. இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் டெல்லியில் தனித்து போட்டியிடுவதால், இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி) ஆகிய 3 கட்சிகள் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்திருப்பது குறித்து கெஜ்ரிவால், எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையில், ‘டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவளிப்பதாக திரிணாமுல் அறிவித்துள்ளது. மேற்குவங்க முதல்வர் மம்தாவுக்கு தனிப்பட்ட முறையில் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நல்ல நேரத்திலும் சரி… நெருக்கடியான நேரத்திலும் சரி… நீங்கள் எப்போதும் எங்களை ஆதரித்து ஆசீர்வதித்துள்ளீர்கள்,’என பதிவிட்டுள்ளார். மேலும், அகிலேஷ் யாதவுக்கும் ‘மிக்க நன்றி. நீங்கள் எப்போதும் எங்களுக்கு துணை நிற்பீர்கள். இதற்கு நானும் டெல்லி மக்களும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்,’ என தெரிவித்துள்ளார்.

* பீகார் நிலை என்ன?
பீகார் சட்டப்பேரவைக்கு அக்டோபரில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு இந்தியா கூட்டணியில் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் உரசல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங், இந்தியா கூட்டணி மக்களவைத் தேர்தலுக்கு மட்டுமே என்று கூறியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு appeared first on Dinakaran.

Related Stories: