ரூ.1 கோடியில் அமைக்கப்பட்ட பீடரில் இருந்து கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார மக்களுக்கு மின் வினியோகம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கும்மிடிப்பூண்டி: ரூ.1 கோடியில் அமைக்கப்பட்ட பீடரில் இருந்து கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார பகுதி மக்களுக்கு மின் வினியோகத்தை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். கும்மிடிப்பூண்டி, சிப்காட், மாதர்பாக்கம், தேர்வாய் ஆகிய துணை மின்நிலையங்களில் இருந்து பூவலம்பேடு, பாதிரிவேடு, எளாவூர், சுண்ணாம்புகுளம், ரெட்டம்பேடு, குருவாட்டுச்சேரி, பெத்திகுப்பம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சியில் உள்ள வீடுகளுக்கு மின் சப்ளை செய்யப்படுகிறது. இந்தநிலையில் 2011-2021 அதிமுக ஆட்சிக்காலத்தில் 11 கே.வி. திறன்கொண்ட எளாவூர் இசிஎல் பீடரிலிருந்து தம்ரெட்டிப்பாளையம் – ராகவரெட்டிமேடு, சாமிரெட்டி கண்டிகை, முனுசாமி பூபால் நகர், சுண்ணாம்புகுளம், ஓபசமுத்திரம், பெரிய குப்பம் ஆகிய சுற்றுவட்டார கிராமங்களுக்கு மின் சப்ளை செய்யப்பட்டது. ஆனால் பல்வேறு இயற்கை சீற்றங்களால் தம்புரெட்டிபாளையம், ராகவரெட்டிமேடு சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி தொடர் மின்னழுத்தம் மற்றும் மின்வெட்டு ஏற்பட்டு, பள்ளி மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். இது சம்பந்தமாக அதிமுக ஆட்சியில் தொடர்ந்து பொதுமக்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதன் பின்பு திமுக ஆட்சி அமைந்தவுடன், குறிப்பாக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் வெற்றி பெற்றவுடன் தம்புரெட்டிப்பாளையம் – ராகவரெட்டிமேடு பகுதிக்கு புதிய 11 கேவி திறன்கொண்ட பீடர் அமைக்க வேண்டுமென அப்பகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று முன்னாள் பொன்னேரி மின்வாரிய செயற்பொறியாளர் அதிகாரிகளிடையே கலந்து ஆலோசித்து அதற்கான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு சுமார் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையத்திலிருந்து நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ராட்சத மிஷின்களை வைத்து கேபிள் புதைக்கும் பணி இரவு பகலாக நடந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மின்சாரம் தொடங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பீடரை ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இதில் பொன்னேரி செயற்பொறியாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். மின்வாரி துணை செயற்பொறியாளர் சிவக்குமார், கதிரவன், பன்னீர்செல்வம், பிரபாகரன், மாவட்ட பொருளாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் மணிபாலன், பேரூர் செயலாளர் அறிவழகன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பாஸ்கரன், துணை தலைவர் கேசவன், பேரூர் அமைப்பாளர் சாண்டிலியன், மாவட்ட பிரதிநிதி இஸ்மாயில், காளிதாஸ் உள்ளிட்ட பேருர் கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர்.

 

The post ரூ.1 கோடியில் அமைக்கப்பட்ட பீடரில் இருந்து கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார மக்களுக்கு மின் வினியோகம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: