வையம்பட்டி அருகே 100 நாள் வேலைக்கு சென்ற மூதாட்டி மாயம்; மோப்பநாய் உதவியுடன் தேடும் பணி

துவரங்குறிச்சி, ஜன.9: வையம்பட்டி அருகே 100 நாள் வேலைக்குச் சென்ற மூதாட்டி மாயமானார். அவரை மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி நடுப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னம்மாள் (70). 100நாள் வேலை செய்து வருகிறார். இவருக்கு 3 மகன்களும், நான்கு மகள்களும் உள்ளனர். சின்னம்மாள் தனது மூன்றாவது மகன் பெரியசாமியுடன் நடுப்பட்டியில் வசித்து வருகிறார்.
நேற்றுமுன்தினம் வழக்கம்போல் காலை நடுப்பட்டிமலை அடிவாரத்தில் 100 நாள் வேலைக்குச் சென்ற சின்னம்மாள் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர்கள் வீடு உள்பட அக்கம்பத்தினரிடம் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதையடுத்து வையம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின்பேரில் வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் திருச்சியில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு மோப்பநாய் உதவியுடன் போலீசார் மற்றும் வனத்துறையில் மூதாட்டியின் ஊரான நடுப்பட்டியிலிருந்து அங்கு உள்ள மலை அடிவாரத்திற்கு அவர் 100 நாள் வேலைக்குச் சென்றதாக கூறப்படும் இடம் வரையிலும் சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். மோப்பநாய் மலை அடிவாரத்தில் இருந்து சுற்றி வளைத்து மீண்டும் நடுப்பட்டிக்கு வந்து நின்றது. மேலும் இரவாகி விட்டதால் மூதாட்டியை தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று மீண்டும் வனத்துறையினர் உதவியுடன் மலைப்பகுதியில் மூதாட்டியை தேடும் பணி தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post வையம்பட்டி அருகே 100 நாள் வேலைக்கு சென்ற மூதாட்டி மாயம்; மோப்பநாய் உதவியுடன் தேடும் பணி appeared first on Dinakaran.

Related Stories: