காசிக்குச் சென்றால் ஏதாவது ஒன்றை விட்டுவிடுவது ஏன்?

?காசிக்குச் சென்றால் ஏதாவது ஒன்றை விட்டுவிடுவது ஏன்?
– பாலசுந்தரம், சென்னை.

பற்று அற்ற நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதே இதன் அர்த்தம். அக்காலத்தில் குடும்பப் பொறுப்பினை நடத்தி முடித்தவர்கள் காசிக்குச் செல்வது வழக்கம். எந்த ஒரு பொருளின் மீதும் அதிக பற்றோ அல்லது விருப்பமோ இருக்கக் கூடாது, எதன் மீதும் எந்த ஒரு ஆசையும் இன்றி இறைவன் ஒருவனையே மனதில் சதா தியானித்து இருக்க வேண்டும் என்பதற்காக உண்டான பழக்கம் இது. பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து பேரன், பேத்திகளைக் கொஞ்சி மகிழ்ந்து தன் இல்வாழ்க்கை கடமையைச் செவ்வனே செய்து முடித்தவர்கள் காசி, ராமேஸ்வரம் என தீர்த்த யாத்திரை மேற்கொள்வர். மோட்ச கதியை வேண்டி இறைவனின் திருத்தலங்களை நாடிச் செல்வோர் இந்துக்களின் புனிதத்தலமாக விளங்கும் காசியில் புண்ணிய நதியாம் கங்கையில் ஸ்நானம் செய்து முன்னோர்களுக்காக பிண்டம் வைத்து ஆராதனை செய்வர். கங்கையில் ஸ்நானம் செய்தால் செய்த பாவங்கள் அனைத்தும் தொலையும் என்பது நம்பிக்கை. கங்கையில் ஸ்நானம் செய்து புதுமனிதனாக வெளிவரும்போது எதன் மீதும் அதிகப் பற்று இருக்கக் கூடாது என்பதற்காக மிகவும் பிரியமான வஸ்துக்களை இனிமேல் உபயோகிப்பதில்லை என விட்டுவிடுவர். எனக்குப் பிரியமான கத்திரிக்காயை காசியில் விட்டுவிட்டேன், இனிமேல் சாப்பிடமாட்டேன் என்று பெருமை பேசுவதால் மட்டும் எந்தப் பலனும் கிடைத்துவிடாது. அதன் உண்மையான பொருளைப் புரிந்துகொண்டு எந்த ஒரு பொருளின் மீதும் அதிக ஆசையோ, பற்றோ வைக்காமல் வாழவேண்டும். அவ்வாறு வாழ்பவனுக்கு ஆணவமும், அகம்பாவமும் தானாகவே அழிந்து விடும். ‘ஆசை துறந்தால் அகிலம் உனக்கு’ என்ற கவிஞரின் வரிகளை அனுபவத்தில் உணர முடியும்.

?கோயில் திருவிழாக்களுக்கு பந்தக்கால் நட்டு முகூர்த்தம் செய்துவிட்டால் உள்ளூர்வாசிகள் வெளியூர் செல்லக் கூடாது என்கிறார்களே, இது எதனால்?
– எஸ்.இளங்கோவன், மயிலாடுதுறை.

உள்ளூரில் திருவிழா நடக்கும்போது ஊரில் இருப்போர் ஒவ்வொருவராக வெளியூருக்குச் சென்றுவிட்டால் திருவிழாவை சிறப்பாக எவ்வாறு நடத்த இயலும் என்பது போன்ற காரணங்கள் மேலோட்டமாகச் சொல்லப்பட்டாலும் உண்மையில் அது உள்ளூர்வாசிகளின் நன்மை கருதியே சொல்லப்பட்டுள்ளது. ஊரில் கொடியேற்றிவிட்டால் உற்சவம் முடியும் வரை ஊரைச் சுற்றி எட்டு திசைகளிலும் அமைத்துள்ள பலி பீடங்களுக்கு பூஜை செய்து நைவேத்தியம் செய்வார்கள். எண்திசை பாலகர்கள் அந்த ஊருக்குள் எந்த விதமான தீயசக்தியும் அண்டாமல் பாதுகாக்கிறார்கள் என்ற தாத்பரியத்தை முன்னிறுத்திச் செய்வார்கள். திருவிழா நடத்துவது என்பது அந்த ஊர்மக்களுக்கான ஒரு பாதுகாப்பு கவசம் போன்றது. அந்தப் பகுதியில் வாழும் மக்களை எந்தவிதமான எதிர்மறை சக்தியும் அண்டிவிடக்கூடாது என்பதற்காக மிகுந்த பொருட்செலவில் திருவிழாவை நடத்திக் கொண்டிருக்கும்போது உள்ளூர்வாசிகள் வெளியூருக்குச் சென்றால் அந்த ஊர் எல்லைக்கு அப்பால் விரட்டப்பட்ட எதிர்மறை சக்திகள் மிக எளிதாக ஊரைவிட்டு வெளியே வருபவர்களை அண்டிவிடும் அல்லவா, அதனால்தான் உள்ளூர்வாசிகள் கோயிலில் காப்புகட்டிவிட்டால் வெளியூர் செல்லக்கூடாது என்றும் வெளியூர்வாசிகள் உள்ளூருக்குள் வரக்கூடாது என்றும் சொல்லிவைத்தார்கள். இது போன்ற கட்டுப்பாடுகள் அந்த ஊரில் வசிக்கும் பொதுமக்களின் நன்மை கருதியே என்பதைப் புரிந்துகொண்டால் ஆரோக்யத்துடனும் மன நிம்மதியுடனும் வாழ இயலும்.

?பல வீடுகளில் சாமி படங்கள் பல இடங்களில் (காலண்டர் உட்பட) வைத்திருப்பது சரியா?
– ஆசை மணிமாறன், திருவண்ணாமலை.

சரியே. இறைவன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான் எனும்போது எல்லா இடங்களிலும் சாமி படங்களை வைத்திருப்பது சரியே. ஒரு சிலர் தங்களது பர்ஸ்களிலும், சட்டைப் பாக்கெட்டிலும்கூட சாமி படங்களை வைத்திருக்கிறார்களே இதுவும் சரிதான். படங்களுக்கு அதிகமாக ஆசாரம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. விக்ரகம் எனும்போது அதற்குரிய பூஜை முறைகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும்.

?காகம், கிளி, குருவி போன்ற பறவைகள் நம்மேல் எச்சம் விட்டால் நன்மையா? தீமையா? அல்லது ஏதேனும் அறிகுறியா?
– த.பழனியப்பன், சீர்காழி.

இது ஒரு தற்செயலான நிகழ்வே அன்றி இதனைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. இதில் நன்மை ஏதும் இல்லை. அதே நேரத்தில் எச்சம் என்பது அதன் கழிவு என்பதால் அதனை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் அல்லவா. நமது ஆடையின் மீது மட்டும் பட்டிருந்தால் உடனடியாக ஆடையை மாற்றிக் கொள்ள வேண்டும். உடம்பில் எங்கேனும் பட்டிருந்தால் உடனடியாக ஸ்நானம் செய்துவிட வேண்டும். அவ்வளவுதான். அதனை ஏதோ ஒரு நிகழ்விற்கான அறிகுறி என்று நினைத்து அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

?பணிக்காக கணவர் அதிகாலை வெளியூர் சென்ற பிறகு மனைவி வாசல் தெளித்து கோலமிடுவது சரியா?
– ரம்யா, திருச்சி.

நிச்சயமாகச் சரியில்லை. உங்கள் கேள்வியிலேயே பதிலும் ஒளிந்துள்ளது. பணிக்காக கணவர் அதிகாலையில் வெளியூர் கிளம்புகிறார் என்கிறீர்கள். கோலம் போடுவது என்பதே அதிகாலையில் செய்ய வேண்டிய ஒன்று. ஆக, கணவர் கிளம்புவதற்கு ஒரு பத்து நிமிடம் முன்னதாக வாசல் தெளித்து கோலமிடுவதில் என்ன சிரமம் இருக்கப் போகிறது? ‘டாட்டா.. பய் பை..’ என கைகளை ஆட்டி கணவரை வழியனுப்புவதில் இன்பம் காணும் பெண்கள் அதற்கு முன்னதாக வாசல் தெளித்து கோலமிடுவதிலும் கவனம் கொள்ள வேண்டும். கணவர் மட்டுமல்ல, பிள்ளைகள் அல்லது வீட்டிற்கு வந்திருக்கும் உறவினர்கள், நண்பர்கள் எவராயினும் அவர் கிளம்பியவுடன் தலைக்கு ஸ்நானம் செய்வதோ, வீட்டினை அலம்புவதோ, வாசல் தெளிப்பதோ கண்டிப்பாக செய்யக்கூடாது.

The post காசிக்குச் சென்றால் ஏதாவது ஒன்றை விட்டுவிடுவது ஏன்? appeared first on Dinakaran.