புதுச்சேரி, ஜன. 7: புதுவை பெண் உட்பட 4 பேரிடம் ₹1.20 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த உத்தமன். இவர் இணையதளத்தில் பொருளை அனுப்புவதற்கு பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் குளோபல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், பொருளை அனுப்ப முன்பணம் அனுப்புமாறும் தெரிவித்துள்ளார். இதனை நம்பி உத்தமன் ₹80 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். அதன்பிறகு உத்தமன், மர்ம நபரை தொடர்புகொண்டபோது போனை எடுக்கவில்லை. அதன்பிறகே அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது.
மேலும் ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்த குமார் என்பவர் ஓட்டல் அறை முன்பதிவு செய்ய ஆன்லைனில் தேடியுள்ளார். அப்போது ஆன்லைனில் இருந்த ஒரு நம்பரை தொடர்புகொண்டு பேசிய போது, மர்ம நபர் முன்பதிவு பணம் அனுப்புமாறு கூறியுள்ளார். இதனை நம்பி ஆனந்தகுமார் ₹27 ஆயிரம் அனுப்பி மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார். தொடர்ந்து மூலகுளம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் ₹17 ஆயிரம், புதுவையை சேர்ந்த கவிதா ₹6 ஆயிரம் என மொத்தமாக ₹1.20 லட்சம் பணத்தை மோசடி கும்பலிடம் பணத்தை இழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பெண் உட்பட 4 பேரிடம் ₹1.20 லட்சம் மோசடி appeared first on Dinakaran.