வேலூர், ஜன.7: வேலூர் கோட்டையில் மாநில அரசு சார்பில் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் உள்ளூர் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளிமாநிலங்கள், வெளிநாட்டினர் என பலர் வந்து செல்கின்றனர். மேலும் வரலாற்று தகவல்களை தெரிந்துகொள்ளும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் அருங்காட்சியத்திற்கு வருகின்றனர். இங்கு முக்கிய நாட்களில் ஓவியப்போட்டி, எழுத்துப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக முக்கியமான பண்டிகை நாட்கள், தீபாவளி ஒருநாள், பொங்கல் ஒரு நாள் விடுமுறையாக வழங்கப்படுகிறது. காலை 10.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ₹10 ரூபாயும், சிறியவர்களுக்கு ₹5 ரூபாயும், வெளிநாட்டவர்களுக்கு ₹100 ரூபாய் தற்போது கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் கல்விச்சுற்றுலா வரும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசம். கடந்த 2024ம் ஆண்டில் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வேலூர் அருங்காட்சியத்திற்கு பெரியவர்கள் 80 ஆயிரத்து 81 பேரும், குழந்தைகள் 27 ஆயிரத்து 398 பேரும், பள்ளி மாணவர்கள் 11 ஆயிரத்து 178 பேரும், வெளிநாட்டவர்கள் 176 பேரும் என மொத்தம் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 833 பேர் வருகைதந்துள்ளனர். இவர்களிடமிருந்து ₹6 லட்சத்து 24 ஆயிரத்து 594 ரூபாய் கட்டணம் மூலம் வருவாய் கிடைத்துள்ளதாக காப்பாட்சியர் சரவணன் தெரிவித்தார்.
The post அரசு அருங்காட்சியகத்திற்கு 1.18 லட்சம் பேர் வருகை கடந்த ஆண்டில் ₹6.18 லட்சம் வருமானம் appeared first on Dinakaran.