திருத்தணி-அரக்கோணம் சாலையில் பரபரப்பு; ஊராட்சி இணைப்பை கைவிட வலியுறுத்தி மக்கள் போராட்டம்: வட்டாட்சியர் சமரச பேச்சுவார்த்தை

திருத்தணி: திருத்தணி நகராட்சியுடன் கார்த்திகேயபுரம் ஊராட்சியை இணைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, இன்று காலை திருத்தணி-அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வட்டாட்சியர் மலர்விழி சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தமிழகத்தில் மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிகளை விரிவுபடுத்தும் வகையில், கடந்த சில நாட்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு அரசாணை வெளியிட்டள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி நகராட்சியுடன் கார்த்திகேயபுரம் ஊராட்சி இணைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, திருத்தணி நகர எல்லையில் அமைந்துள்ள கார்த்திகேயபுரம் ஊராட்சியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

திருத்தணி நகராட்சியுடன் கார்த்திகேயபுரம் ஊராட்சியை இணைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், திருத்தணி நகராட்சியுடன் கார்த்திகேயபுரம் ஊராட்சியை இணைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வலியுறுத்தி, இன்று காலை திருத்தணி-அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், கார்த்திகேயபுரம் ஊராட்சியை சேர்ந்த பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்ட மக்கள் அமர்ந்து, கைகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அடையாள அட்டைகள் வைத்துக்கொண்டு, நகராட்சியுடன் கிராம பகுதி இணைப்பை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் திருத்தணி டிஎஸ்பி கந்தன் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வட்டாட்சியர் மலர்விழி விரைந்து வந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், திருத்தணி நகராட்சியுடன் கார்த்திகேயபுரம் ஊராட்சியை இணைக்க கூடாது என்று கிராம மக்கள் வழங்கிய மனுக்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.

The post திருத்தணி-அரக்கோணம் சாலையில் பரபரப்பு; ஊராட்சி இணைப்பை கைவிட வலியுறுத்தி மக்கள் போராட்டம்: வட்டாட்சியர் சமரச பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Related Stories: