தரமான கல்வியை வழங்குவதில் உறுதியுடன் செயல்படும் தமிழ்நாடு அரசுக்கு எந்தவொரு நிதியையும் ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை

தரமான கல்வியை வழங்குவதில் உறுதியுடன் செயல்படும் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டில் எந்தவொரு நிதியையும் ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை என பேரவையில் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், விடுதி மற்றும் போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட மொத்த கல்விச் செலவினையும் அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. கல்வியாண்டுகளில், கடந்த 4 ஆண்டுகளின் இத்திட்டத்தின் நான்கு கீழ் ரூ. 1,165 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 35,530 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். புதுமைப் பெண் திட்டம் எனும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு அவர்களின் இளங்கலைக் கல்விக் காலம் முழுவதும் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதனைதொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் 6 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி பயிலும் காலத்தில் மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கான தமிழ்ப் புதல்வன் திட்டத்தையும் கடந்த ஆண்டு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், நடப்புக் கல்வியாண்டில் மட்டும் 3.52 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
நான் முதல்வன் திட்டமானது மாணவர்களை தொழில்சார்ந்த திறன் கொண்டவர்களாக மேம்படுத்தி, இந்தியாவின் திறன்மிக்க இளைஞர்களின் தலைநகரமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்தியுள்ளது. 2023-24ம் ஆண்டில், இத்திட்டம் பலதொழில்நுட்பக் கல்லூரிகளுக்கும், தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, 2,085 கல்வி நிறுவனங்களில் பயிலும் 14.68 லட்சம் மாணவர்கள் தற்போது பயன்பெற்றுள்ளனர்.

அனைவரின் வரவேற்பினையும் பெற்ற இத்திட்டத்தின் மூலம் நடத்தப்படும் வளாக வேலைவாய்ப்பு முகாம்கள் வாயிலாக, இதுவரை 2,58,597 வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்குவதில் தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்பட்டு வரும் நிலையில், மாநிலத்தின் முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு தேவையான ஆதரவினை வழங்கவில்லை. ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை விடுவிக்கக் கோரி தொடர்ந்து முறையிட்டும், புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காததைக் காரணமாகக் கூறி, ஒன்றிய அரசு நடப்பு ஆண்டில் இதுவரை எந்தவொரு நிதியையும் விடுவிக்கவில்லை. ரூ.2,152 கோடி அளவில் உள்ள இந்நிலுவைத் தொகையானது, ஆசிரியர்களின் ஊதியம், பள்ளிக் கட்டடங்களைப் பராமரித்தல் மற்றும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கல்விக் கட்டணத்தைத் திருப்பிச் செலுத்துதல் உள்ளிட்ட பள்ளிகளின் பல்வேறு செயல்பாடுகளுக்கு மிகவும் இன்றியமையாததாகும். ஒன்றிய அரசு இந்த நிதியை வழங்காததால், தனது சொந்த நிதி ஆதாரங்களிலிருந்து மாநில அரசே இத்திட்டத்திற்கான ஒட்டுமொத்தச் செலவையும் ஏற்க வேண்டியுள்ளது. இதனால், மாநில அரசின் நிதிநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
44லட்சம் மாணவர்கள், 2.2 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 21,276 பணியாளர்களின் எதிர்காலம் இதில் அடங்கியுள்ளது.

 

The post தரமான கல்வியை வழங்குவதில் உறுதியுடன் செயல்படும் தமிழ்நாடு அரசுக்கு எந்தவொரு நிதியையும் ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை appeared first on Dinakaran.

Related Stories: