சட்டப்பேரவைக்கு வந்த காங்கிரஸ் கட்சியினர் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.
அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கைகளில் பதாகைகளை வைத்திருந்தனர். அண்ணா பல்கலைக்கழகம் விவகாரத்தில் நியாயம் கிடைக்க வேண்டும் என்று கேட்டனர். அண்ணா பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் இருப்பதால், அவருக்கு எதிராக இந்த போராட்டம் செய்தார்களா என்று எனக்கு தெரியவில்லை. அதுகுறித்து அவர்கள் யாரும் என்னிடம் சொல்லவும் இல்லை. அண்ணா பல்கலைக்கழகத்தின் வேந்தரான தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டப்பேரவையில் பேச எழுந்தபோதுதான், அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து, பதாகைகளைக் காட்டினர். நானோ, முதல்வரோ பேசும்போது, அந்த பதாகைகளை அவர்கள் காட்டவில்லை. எனவே, அதற்கு என்ன அர்த்தம் என்று அவர்களைத்தான் கேட்க வேண்டும். எனக்கு தெரியாது. அதனால்தான், உள்ளே என்ன நடந்தது என்று தெரியாமல், எந்த செய்தியையும் என்னை கேட்காமல் வெளியிட வேண்டாம், என்று கூறினேன். ஆளுநர் உரைக்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணம், கலவர நோக்கத்துடன் அதிமுக செயல்பட்டதால் தான், அவர்களை வெளியேற்றினோம். ஆளுநர் வெளிநடப்பு குறித்து அவை முன்னவர் துரைமுருகன் கூறியிருக்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 176 (1)-ன்படி, சட்டப்பேரவையில் ஆளுநர் உரையைப் படிக்க வேண்டும். எனவே, ஆளுநர் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியிருக்க வேண்டும். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இதுபோல் ஆளுநர் செய்து கொண்டிருக்கிறார்.
அது தவறு என்பதை பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து கண்டித்திருக்கிறோம். கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா உள்பட பல பகுதிகளை உள்ளடக்கியது மெட்ராஸ் பிரசிடென்சி. 1920ல் சட்டமன்ற தேர்தல் நடந்து, முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் 1921ல் நடந்தது. அதன் தொடர்ச்சியாக நடந்து வருகிற மரபுபடி, தமிழக சட்டமன்றம் நடைபெறுகிறது. எந்த ஆளுநரும் தேசியகீதம் முதலில் இசைக்க வேண்டும் என்பது போன்ற பிரச்னையை உருவாக்கவில்லை. 1995ல் முன்னாள் ஆளுநர் சென்னாரெட்டியை உடனடியாக திரும்ப பெற வேண்டும். தன்னிடம் கேட்டுவிட்டுத்தான் புதிய ஆளுநரை நியமிக்க வேண்டும், என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு, 1996ல் ஆளுநர் உரை நிகழ்த்தப்பட்டது. ஆனாலும் சென்னாரெட்டி தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டுத்தான் சென்றார். ஆளுநர் உரை நடைபெறுகின்ற அந்த நாள், சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்த நாட்களின் கணக்கில் வராது. அன்றைய தினம் சட்டமன்றம் நடந்ததாக கருதப்படாது. ஆளுநர்கடமை அந்த உரையை வாசித்துவிட்டுச் செல்ல வேண்டும். அந்த உரிமை மட்டுமே அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே, கருத்து சொல்வதற்கு எல்லாம் யாருக்கும் உரிமை கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 234 பேர் மட்டும் தான், பேரவையில் கருத்து சொல்ல முடியும். மற்றவர்களுக்கு கருத்து சொல்லக்கூடிய உரிமை இல்லை. உரையை வாசிக்க விருப்பமில்லாததால், தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பதை ஆளுநர் ஒரு சாக்கு போக்காக கூறி வருகிறார் என்பதை நான் தெரிந்து கொண்டேன். பேரவைக் கூட்டத்தொடருக்கு அழைக்க சென்றபோது ஆளுநர் சிறப்பான முறையில் உபசரித்தார். அப்போது எந்தவித கருத்து முரண்பாடுகளும் ஏற்படவில்லை. பேரவையிலும் சட்டத்தின்படி, ஆளுநருக்கு தர வேண்டிய அனைத்து மரியாதைகளும் தரப்பட்டன. தொடர்ந்து ஆளுநர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக, செயல்படுவது நியாயமா என்பதை நீங்கள் தான் கூற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post வரும் 11ம் தேதி வரை பேரவை நடக்கும்: பேரவை தலைவர் அப்பாவு பேட்டி appeared first on Dinakaran.