குறிப்பாக பஞ்சாப் மாநிலம் கண்ணூரி எல்லையில் 38வது நாளாக விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு அமைப்பினரும் ஆதரவளித்து வருகின்றனர். மேற்கண்ட விவகாரம் தொடர்பாக விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் டல்லேவாலோ தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, “இந்த விவகாரத்தில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசின் கதவுகள் திறந்தே இருக்கும் என்று ஒன்றிய அரசால் ஏன் கூற முடியவில்லை?. இதுவே விவசாயிகளுக்கு மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தும். அதனை ஒன்றிய அரசு ஏன் கருத்தில் கொள்ளவில்லை. விவசாயிகளின் குறைகளை கேட்கிறோம் என்று கூட உங்களால் கூற முடியாதா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க உள்ளோம் என்று தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “நோட்டீஸ் பிறப்பிப்பதற்கு பதிலாக மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுவின் நகலை எங்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும். அதனைத்தொடர்ந்து மனு மீதான பதிலை ஒன்றிய அரசிடம் பெற்று நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்கிறோம்” என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து மனு மீதான நகலை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு வழங்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், பத்து நாட்களுக்குள் பதில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
The post போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை கூட நடத்த முடியாதா? ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி, 10 நாளில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு appeared first on Dinakaran.