புத்தாண்டு தினத்தன்று கூட எங்களை காயப்படுத்துவதில் மட்டுமே ரஷ்யாவுக்கு அக்கறை: உக்ரைன் அதிபர் கண்டனம்

கீவ்: புத்தாண்டு தினத்தன்று கூட எங்களை காயப்படுத்துவதில் மட்டுமே ரஷ்யா அக்கறை கொண்டுள்ளது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணைய கூடாது என்பதற்காக, அந்நாட்டின் மீது அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022, பிப்ரவரி 24ம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், போரின்போது சிறைபிடிக்கப்பட்ட கைதிகளை ரஷ்யா மற்றும் உக்ரைன் சுமுக முடிவின்படி பரிமாறி கொண்டது.

2 ஆண்டுகளை தாண்டி நடக்கும் ரஷ்யா-உக்ரைன் போரின்போது இருநாடுகளும் ஏராளமான ராணுவ வீரர்களை கைது செய்தது. அவர்களை நல்லிணக்க அடிப்படையில் சொந்த நாடுகளிடம் ஒப்படைக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்ததன் பேரில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இதற்கான பேச்சுவார்த்தை நடந்தது. இதைத்தொடர்ந்து தலா 150 கைதிகளை ரஷ்யாவும், உக்ரைனும் பரிமாறி கொண்டன. அவர்கள் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புத்தாண்டு உரையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசுகையில், ‘இந்த ஆண்டிற்குள் போரை முடிவுக்கு கொண்டு வர தன்னால் முடிந்த வரை அனைத்து வேலைகளை செய்வேன். இந்தாண்டில் ஒவ்வொரு நாளும், போதுமான வலிமையுடன் போராட வேண்டும். இந்தாண்டு எங்கள் ஆண்டாக இருக்கும்’ என்றார்.

அவர் கூறிய சில மணி நேரங்களில், உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘புத்தாண்டு இரவில் கூட ரஷ்யா உக்ரைனை காயப்படுத்துவதில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது’ என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post புத்தாண்டு தினத்தன்று கூட எங்களை காயப்படுத்துவதில் மட்டுமே ரஷ்யாவுக்கு அக்கறை: உக்ரைன் அதிபர் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: