தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் 4 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகி பண்டிகையாகவும், தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் பண்டிகையாகவும் 2ம் நாள் மாட்டுப் பொங்கலும், தை மாதத்தின் 3வது நாள் கன்னிப் பொங்கல் எனும் காணும் பொங்கல் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு வருகிற 13ம் தேதி போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்கள எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடுவர். அந்த வகையில், போகி பண்டிகையன்று பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி பண்டிகையை வரவேற்பது வழக்கம். தொடர்ந்து அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளான 14ம் தேதி பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தொடர்ந்து 15ம் தேதி மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னையில் வசிப்போர் ரயில்களில் முன்பதிவு தொடங்கிய அன்றே ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுத்தனர். மேலும் ஆன்லைன் வாயிலாகவும் முன்பதிவு செய்தனர். இதனால், சென்னையில் இருந்து அனைத்து ஊர்களுக்கு செல்லும் ரயில்களும், குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் முன்பதிவு தொடங்கிய அன்றே ஹஸ்புல் ஆகியுள்ளது.
இதையடுத்து கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் அறிவிக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரயில், பஸ், கார்கள், விமானம் என சென்னையில் இருந்து மட்டும் சுமார் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் சென்னை ெவறிச்சோடியதை காண முடிந்தது. அதே போல இந்தாண்டும் பொங்கல் கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளது. இன்னும் 9 நாட்கள் மட்மே பொங்கல் பண்டிகைக்கு எஞ்சியுள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு சென்று உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு பொங்கல் பண்டிகை கொண்டாட மக்கள் திட்டமிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையானது இந்தாண்டு ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. எனவே பொங்கலுக்கு முந்தைய நாள் திங்கட்கிழமை அதாவது ஜனவரி 13ம் தேதி விடுமுறை விடப்பட வேண்டும். இதே போல பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து திரும்பும் வகையில் ஜனவரி 17ம் தேதி(வெள்ளிக்கிழமை) விடுமுறை விட வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்து வந்தது. ஜனவரி 13 மற்றும் 17ம் தேதிகளில் விடுமுறை விட்டால் தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்பு ஏற்படும். அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் ஜனவரி 17ம் தேதி விடுமுறை அளித்து தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: இவ்வாண்டு தமிழ்நாட்டில் வரும் 14ம் தேதி( செவ்வாய்கிழமை) அன்று தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து 15, 16ம் தேதி, 18ம் தேதி மற்றும் 19ம் தேதி ஆகியவை அரசு விடுமுறை நாட்கள் என்பதாலும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில், அதற்கு இடைப்பட்ட நாளான 17ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.
அக்கோரிக்கைகளை ஏற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், வரும் 17ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும், அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஜனவரி 25ம் தேதி (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு 17ம் தேதி விடுமுறை அறிவித்துள்ளதை தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கான விடுமுறை நாட்கள் எண்ணிக்கை என்பது 6 நாட்களாகி உள்ளது. அதாவது வரும் 14ம் தேதி பொங்கல் பண்டிகை, 15ம் தேதி மாட்டுப் பொங்கல், 16ம் தேதி காணும் பொங்கல், 17ம் தேதி அரசு விடுமுறை, 18ம் தேதி சனிக்கிழமை, 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்று 6 நாட்கள் விடுமுறை வந்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசியர்கள் 13ம் தேதி திங்கட்கிழமை ஒரு நாள் சொந்த விடுப்பு எடுத்தால் முன்னதாக 11, 12 ஆகிய சனி, ஞாயிறு விடுமுறைகளையும் சேர்த்து மொத்தம் 9 நாட்கள் விடுமுறை ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
The post 17ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிப்பு எதிரொலி: பொங்கலுக்கு 6 நாள் தொடர் விடுமுறை: பள்ளி, கல்லூரிகளும் செயல்படாது: சொந்த ஊர் செல்வோர் மகிழ்ச்சி appeared first on Dinakaran.