உங்களை ஆராதிக்க விக்ரஹம் வேண்டும் என்று கேட்டனர். ஸ்ரீமன்நாராயணன், தன் விக்ரகத்தை கொடுத்து ஆராதிக்க சொல்கிறார். அதன்படி நாராயணனின் விக்ரகத்தை ஆராதித்தனர். காலங்கள் செல்லச் செல்ல, அவர்கள் வணங்கிய விக்ரகம் மண்ணுக்குள் புதைந்தது.
சிலா ரூபங்கள்
விக்ரகங்கள் வைத்து கோயில்களில் ஆராதனை செய்கின்றோம். அவற்றை பாதுகாக்கின்றோம். ஆனால், ஒவ்வொரு கோயில் கட்டுவதற்கும் வைகுண்டத்தில் இருந்து திருமால் அனுப்பிய தூதர்கள் ஆவார். பொதுவாக இறைவனினுடைய நின்று திருக்கோலம், அமர்ந்த கோலம், கிடந்த திருக்கோலம் இந்த மூன்றையும் மட்டுமே ஆலய கருவறையில் வைத்து நாம் வணங்குவோம். ஆனால், இவற்றைவிட விசேஷமான சிலாரூபங்கள் உள்ளன. அவை பக்தர்களுக்கு பதினாறு செல்வங்களும் அளிக்க வல்லமை சக்தி உடையது.
சிலா ரூபத்தின் பெருமை என்ன?
மகாவிஷ்ணு அவதாரங்கள் எடுத்த பொழுது பூஜிக்கப்பட்ட சிலா ரூபங்கள் பூமியில் புதையுண்டுபோயின. அவற்றை பூவுலகில் அடையாளம் கண்டு பிரதிஷ்டை செய்ய வைகுண்டத்தில் இருந்து நித்தியசூரிகளை அனுப்பி வைப்பார். அவர்கள் அந்த சிலையை எடுத்து ஸ்தாபனம் செய்வார்கள். அந்த மூர்த்திகளை நாம் வணங்கினோம் என்றால், நமக்கு ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும். அதைவிட திருமால் அவதார காலத்தில் பூஜித்த விக்ரகம் ஸ்ரீமன் நாராயணன் வடிவங்கள் ஆகும். அந்த வடிவங்கள், அவதார புருஷர்களால் பூஜிக்கப்பட்டு, விஷ்ணுவின் வம்சாவழியின் வழிவழியாக எடுத்து, தொட்டு, பூஜித்த சிலாரூபம், கோடி ஜென்ம புண்ணியப் பலனை கொடுத்து, பாவத்தைப் போக்கும்.
மழை, வெள்ளம், பூமியின் அதிர்வு, கடலின் சீற்றம் ஆகியவற்றின் அழிவின் காரணமாக மண்ணில் புதைந்துவிடும். அத்தகைய அபூர்வ சிலையை நம் மகரிஷிகள், முனிவர்கள், தேவ ரிஷிகள், வைகுண்ட வாசிகளால் எடுக்கப்பட்டு, கோயில் எழுப்பி, அச்சிலையைப் பிரதிஷ்டை செய்வார்கள். திரேதாயுகம் காலகட்டத்தில், சனகாதி முனிவர்களால் பூஜிக்கப்பட்டது.
திரேதாயுகம்
ஸ்ரீராமர், சூரிய வம்சத்தில் தோன்றியவர். இஷ்வாகு சக்கரவர்த்தி, சத்திய லோகத்தில் இருந்த பூலோக வைகுண்ட நாதனை கொண்டு வந்து சரயூ நதிக்கரையோரம் வைத்து பூஜித்து வந்தார். அதன் பின்பு கைகேயியின் மனமாற்றத்தால் ராமபிரான் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றார். அப்பொழுது ராவணன், சீதையை கவர்ந்து சென்றார். சுக்ரீவன், அனுமன் உதவியோடு சீதாதேவியை மீட்டார். தனக்கு உதவி இருந்த விபீஷணருக்கு, “விபீஷணாழ்வார்’’ என்ற பட்டம் சூட்டினார்.
பின்னர் அயோத்திக்கு அனைவரையும் அழைத்து சென்ற பொழுது, விபீஷணருக்கு பரிசளிக்க வேண்டும் என்ற எண்ணம் ராமபிரானுக்கு உதித்தது. இலங்கை மன்னன், விபீஷணருக்கு சத்திய லோகத்தில் இருந்து கொண்டு வந்த பூலோக வைகுண்ட ரங்கநாதனை, அவரிடம் கொடுக்க, இலங்கைக்கு கொண்டு செல்ல நேரிடும்போது, காவிரி நதி தீரத்தில், ஸ்ரீரங்கத்திலே வைத்தார்
என்பது நாம் அனைவரும் அறிந்தது.
அதன் பின்பு ஸ்ரீ ராமர், பூஜை செய்ய விக்ரகம் இல்லாமல் வாடினார். அந்த சமயத்தில் அவர் பிரம்ம லோகம் சென்று பிரம்மனிடம் பூஜிக்க ஒரு விக்ரகம் வேண்டும் என்று கேட்டார். பிரம்ம தேவர், விக்ரகத்தை எடுத்து “ராமப் பிரியர்’’ எனப் பெயர் சூட்டி அவரிடம் கொடுக்கிறார். ராமபிரான் அவ்விக்கிரகத்தை பூலோகம் கொண்டு வந்து, சரயூ நதிக்கரை ஓரத்தில் வைத்து வணங்கி வந்தனர். ராம பிரியர் பாதத்தில் திருமகள் திருவடி நாச்சியாராக நான்கு கைகளுடன் அமர்ந்திருப்பாள். இக்காட்சி வேறு எங்கும் காண இயலாது.ஸ்ரீ ராமரின் அன்னையான கவுசல்யா தேவி, அவளுடைய உறவினருக்கு அந்த சிலையை கொடுத்தார். அப்பெண்மணி, யாதவர்கள் இடம் கொடுத்தாள். இவ்வாறு யாதவர்களிடம் ஸ்ரீ ராமப்ரியர் விக்ரகம் சென்றடைந்தது.
துவாபரயுகம்
திருமால் சந்திர வம்சத்தில் கிருஷ்ணா அவதாரம் எடுக்கின்றனர். சூரிய வம்சத்தில் இருந்த ராம பிரியர் விக்ரகம், கிருஷ்ணனின் மனைவியான ஜாம்பவி மகளுக்கு சீதனமாக கொடுத்தார். ஒரு பெண், அதை கொண்டு வந்து கிருஷ்ணனிடம் கொடுத்தனர். துவாரகையில் கிருஷ்ணன், பலராமன் ஆகியோர் இருவரும் தங்கள் பூஜை அறையில் வைத்து ராமப் பிரியரை வணங்கி ஆராதனை செய்து வருகின்றனர்.
ஒரு சமயம், தீர்த்த ஆடலாம் என்று பலராமன் திட்டமிட்டு மைசூருக்கு செல்கிறார். அங்கே திரு நாராயணனை கண்டு வணங்கி அருள் வேண்டி பிரார்த்தித்தார். அவர் இதயம் மின்னொளி போல ஒரு எழுச்சி ஒளிதோன்றியது. தன்னுடைய பூஜை அறையில் இருக்கின்ற ராமப்பிரியர் விக்ரகம் போலவே இருக்கிறது என்று எண்ணினார். இனிமையாக ஷேத்ராடம் முடிந்து துவாரகை திரும்பியதும், தன் தம்பி கிருஷ்ணனிடம் மேலக்கோட்டையில் உள்ள திரு நாராயணனைப் பற்றி விளக்கினார். அதன் பின்பு, கிருஷ்ணனும் பலராமரும் அங்கே சென்று பார்த்து வியப்படைந்தனர். மூலவர் மட்டுமே இருக்கின்றார். உற்சவர் இல்லையே என்று வருத்தப்பட்டனர். ஸ்ரீகிருஷ்ணன், அங்கு உற்சவரை வைக்க தீர்மானித்தார்.
தம்மிடம் உள்ள ராமப்பிரியா விக்கிரகத்தை கொண்டு சென்று, அங்கே வைத்தால், மக்கள் வணங்கி பயன் பெறுவார்கள் என்று தன் அண்ணனிடம் கூறினார். பலராமனும் கிருஷ்ணன் கூறியது சரி எனக்கூறி, ராமப்பிரியா விக்கிரகத்தை திரு நாராயணபுரத்தில் சென்று உற்சவமூர்த்தியாக வைத்து விடுகின்றனர். அவ்வாறே, ராமப்பிரியா விக்ரகம் ஸ்தாபனம் செய்கின்றனர். அங்கே மூலவர் திருநாராயணன், உற்சவர் ராம பிரியராக காட்சியளித்து, மிக மகிழ்ச்சியோடு அருளாட்சி புரிந்து வந்தனர்.
வைரமுடி சேவை
பிரகலாதனுடைய மகன் வீரசேனன் என்பவன் பாற்கடலில் படுத்துக்கொண்டிருக்கின்ற பெருமாளின் கிரீடத்தை அபகரித்து சென்று விடுகின்றார். அதன் பின்பு திருமாலுக்கு கிரீடம் இல்லாமல் தன்னுடைய கிரீடம் எங்கு சென்றது என்று தேடுகின்றார். பிரகலாதன் மகன் எடுத்துச் சென்று விட்டான் என்பதை அறிந்தார். எவ்வாறு மீட்டு எடுத்து வருவது என யோசித்தார். தன் வாகனமான கருடனை (வைநதேயன்) அழைத்தார். தன் கிரீடத்தை பிரகலாதன் மகன் எடுத்துச் சென்றுள்ளார். அவரிடம் இருந்து மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்றார். வைநதேயன், பிரகலாத மகனிடம் இருந்த கிரீடத்தை எடுத்துக் கொண்டு வந்து திருமாலிடம் தந்தார்.
அக்கிரீடம் தேடிச் சென்று எடுத்து வந்ததால் வைநதேயன் பெயரால் “வைந முடி’’ என்று பெயரிட்டார். இந்த “வைநமுடி’’ யாருக்கு பொருந்தும் என்று அவர் பார்க்கின்றார்.ஸ்ரீகிருஷ்ணன், துவாரகையில் ஆட்சி செய்தார். கிருஷ்ணன் தலையில் கிரீடம் வைக்கும் பொழுது அது பொருந்தவில்லை. சரி இது யாருக்குத்தான் பொருந்தும் என்று ஆலோசித்துக் கொண்டே மேல்கோட்டையில் நாராயணபுரத்தில் உள்ள ராம பிரியருக்கு அந்த வைநமுடியானது கனகச்சிதமாக பொருந்திவிட்டதால், அவருக்கு சூட்டப்பட்டது. வைநமுடி காலப்போக்கில் திரிந்து வைரமுடியாக மாறியது.
கலியுகம்
பன்னிரண்டு ஆண்டுகள் மறைந்திருந்த போது, ராமானுஜருக்கு திருமண் கிடைக்காததால் அவர் மிகவும் வருத்தத்துடன் தேடுகின்றார். அந்த சந்தர்ப்பத்தில் கருடன் காட்சி கொடுத்து அவருக்கு துளசி செடியை காட்டுகின்றார். துளசி செடி அருகே சென்று பார்த்தார். மண்ணோடு திருநாராயண விக்ரஹம் கிடைக்கின்றது. ஹொய்சல மன்னன் விஷ்ணுவர்த்தரை வைணவனாக்கி, கோயிலை கட்டி எண் கோண வடிவில் பெருமாளுக்கு விமானம் கட்டச் செய்தார். மகிழ்ச்சியோடு மூலவரை பூஜை செய்யும் பொழுது வீதி உலா வருவதற்கு உற்சவம் மூர்த்தி தேவை அல்லவா என்று சிந்தித்தார். திடீரென்று உற்சவரை வைத்து வழிபட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதும், உற்சவர் எங்கிருப்பார் என்று அவர் தேடுகின்றார்.
அக்கணம் அசரீரி தோன்றி, நீ தேடும் உற்சவர் டெல்லி சுல்தான் மன்னரான டெல்லி பாதுஷாவிடம் உள்ளது. அவரிடம் இருந்து பெற்று வரலாம் என்று கூறியதும், ஸ்ரீமத் ராமானுஜர் தன் 80வது வயதில் டெல்லி பயணத்தை மேற்கொண்டார். டெல்லி பாதுஷா மன்னரிடம், தான் வந்த காரணத்தைக் கூறினார். அவரைப் பற்றிய தகவல்கள் முதலில் அறிந்திருந்ததால், பாதுஷா மன்னர் அவரை வரவேற்று உபசரித்தார்.
நான் சிலைகளைக் கொண்டு வந்ததென்னவோ உண்மையே, ஆனால் நீங்கள் கூறும் சிலை எங்கு உள்ளது என்று உறுதியாகக் கூற இயலாது. ஓர் அறையில் குவித்திருக்கிறேன் அங்கு சென்று பாருங்கள் என்றார். ராமானுஜர், அவ்விடத்திற்கு சென்று பார்த்து, மீண்டும் மன்னரிடம் வந்து, அங்கு இல்லை என்ற தகவல் சொன்னதும், அந்தப்புரத்தில் ஒரு விக்ரகம் உண்டு. என்னுடைய மகள் அதை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறாள். நீங்கள் அங்கு சென்று இவ்விக்ரகமா என்று பாருங்கள் என அனுப்பி வைத்தார். அந்தப் புரத்தில் சென்று ராமானுஜர் பார்க்க, அங்கே பீபி நாச்சியார் சிலையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
அவளிடம் இச்சிலை எங்களுடையது கொடுத்து விடுங்கள் என்று கண்ணியமான முறையில் கேட்டதும், அவள் தர மறுத்தாள். டெல்லி பாதுஷா ராமானுஜரை பார்த்து, என் மகள் மறுத்தால் ஒன்றும் செய்ய இயலாது. ஒன்று செய்யலாம். நீங்கள் அழைத்து விக்ரஹம் தானாக வந்தால், எடுத்து செல்லுங்கள். என் மகள் கண்ணீர் சிந்தினாள் என்னால் பொறுக்க முடியாது என்னை மன்னிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். உடனே அவர் உட்கார்ந்து கொண்டு, அன்பின் வடிவான ராம பிரியனே! உனக்காக வந்திருக்கிறேன்.
என் செல்ல பிள்ளை அல்லவா? “வாராய் என் செல்ல பிள்ளையே” நீ செல்லபெருமானே, வருக… வருக.. என்று அன்போடு அழைத்தார். அவரின் அன்பான வார்த்தையும், கண்களில் பொங்கிய கண்ணீரும் கண்டு மனம் இறங்கிய ராம பிரியர், விடுவிடுவென அசைந்து அசைந்து நடந்து வந்து ராமானுஜரின் தொடையின் மீது அமர்ந்து மகிழ்வோடு அவர் முகத்தை அன்னார்ந்து பார்த்தார். உடனே முழு மனதுடன் ராமானுஜர் விக்கிரகத்தை எடுத்துக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் மளமளவென நடந்து வருகின்றார் ராமானுஜர்.
அதன் மீது ஆசையும் அன்பும் தம் உள்ளத்தையே பறி கொடுத்திருந்த பீபி நாச்சியார், என்னுடைய சிலை என் உயிர் சிலை என்னை விட்டு பிரியாதே… என்னை விட்டு விலகாதே என கதறிக் கொண்டே அவரும் பின்தொடர்ந்து வந்தார். ராமானுஜர் திரும்பிப் பார்க்காமல் அங்கு எடுத்த ஓட்டம் மேல்கோட்டையில்தான் வந்து நின்றார். அவரை தொடர்ந்து, வந்த பீபிநாச்சியாரும் ராமபிரியர் பாதத்திலே சரணடைந்தார். அவரோடு இரண்டற கலந்தார்.
இவ்வாறாக, ராமப்பிரியா மேல கோட்டையில் வந்து கலியுகத்தில் வந்து சேர்ந்தார். இந்த காட்சியை கண்டு அவர் மனம் மிகவும் உகந்து ராமப்பிரியாருக்கு “செல்லப் பிள்ளை பெருமாள்’’ என்று பெயரை சூட்டினவர் ராமானுஜர் ஆவார். அனைத்து சேவையை சாதித்து வந்தார். பல ஆண்டுகள் செல்ல பிள்ளைக்கு வைரமுடி சேவை பங்குனி மாதத்தில் செய்து முடித்தார்.
ராமானுஜர் எவ்வாறெல்லாம் செய்தாரோ, அவ்வாறே இன்றும் மேல்கோட்டையில் தொடர்ந்து விழாக்கள் நடைபெறுகின்றது. வைரமுடியை மைசூர் மன்னர் வம்சாவழியில் வந்தோர் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு, வைரமுடி சேவை 10 நாட்கள் உற்சவம் நடைபெறும் போது மட்டும், வெளியில் கொண்டு வருவர். வைரமுடி யாருடைய கண்களிலும் தென்படாமல் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்துதான் அதை செல்லப் பிள்ளை பெருமாள் தலையில் பொருத்தி, அதனை முதல் முதலில் கருடன் பார்க்க, அதன் பின்புதான் மக்கள் அனைவரும் பார்ப்பார்கள் என்பது ஒரு ஐதீகம்.மேல் கோட்டையில் உள்ளது போலவே, 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த, சென்னை ஓட்டேரி குன்னூர் சாலையில் “செல்லப் பிள்ளை ராயர் பெருமாள்’’ கோயில் உள்ளது.
பொன்முகரியன்
The post செல்லப் பிள்ளை பெருமாள் appeared first on Dinakaran.