மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஓட்டலுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் வருகையால், அங்கு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் களையிழந்தது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டல், ரிசார்ட் மற்றும் பண்ணை வீடுகளில் ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏராளமான மக்கள் தங்கியிருந்து கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அதேபோல் இந்தாண்டு ஆங்கில பிறப்பை கொண்டாட, நேற்றிரவு முதல் ஏராளமான வாகனங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் குவிந்திருந்தனர். அனைத்து ஓட்டல், ரிசார்டுகள் வண்ண மின்விளக்குகளால் ஜொலித்தன. இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளில் 10க்கும் மேற்பட்ட தற்காலிக சோதனைசாவடிகள் அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனையிலும் கண்காணிப்பிலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மாமல்லபுரம் இசிஆர் சாலையை ஒட்டிய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக ஓட்டலில், ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளை உற்சாகபடுத்தும் வகையில், கடற்கரையில் மேடை அமைத்து இசை கச்சேரி நடத்தப்பட்டு, கேக் வெட்டி கொடுப்பது வழக்கம். அதேபோல் நேற்றிரவும் ஆங்கில புத்தாண்டு பிறப்பை கொண்டாட மேடை அமைக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று மாலை 6 மணியளவில் தனது குடும்பத்துடன் மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஓட்டலுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வந்து தங்கி, மீண்டும் இரவு 9 மணியளவில் குடும்பத்துடன் சென்னைக்கு திரும்பினார்.
இதனால் தமிழ்நாடு ஓட்டல் விடுதியில் தங்கியிருந்த பயணிகள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர். கடற்கரையில் போட்ட 100க்கும் மேற்பட்ட நாற்காலிகளில், நள்ளிரவு ஆங்கில புத்தாண்டு பிறப்பை கொண்டாட சொற்ப பயணிகளே அமர்ந்திருந்தனர். மற்ற இருக்கைகள் காலியாக இருந்தன. இதனால் பயணிகளிடையே ஒருவித ஏமாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் பயணிகள் இன்றி களையிழந்தது. இதைத் தொடர்ந்து, இன்று காலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
The post மாமல்லபுரத்தில் ஆளுநர் வருகையால் களையிழந்த தமிழ்நாடு ஓட்டல்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.