அதிக தொகை கோரிய அதானி நிறுவனம் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டது: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை: அதானி நிறுவனம் அதிக தொகை கோரியதால் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீடுகளில் மின்சார பயன்பாட்டை கணக்கிட ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த ஒன்றிய அரசு அறிவுறுத்தியது. ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்துவதற்காக புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் ரூ.19,000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் படி வீடு மற்றும் வணிக(விவசாய மற்றும் குடிசை இணைப்பை தவிர) பிரிவில் உள்ள தாழ்வழுத்த மற்றும் உயரழுத்த இணைப்புகளில் 3 கோடியே 14 ஆயிரத்து 117 இணைப்புகளுக்கு தற்போது உள்ள டிஜிட்டல் மீட்டர்களுக்கு பதிலாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்த திட்டமிடப்பட்டது. 2023 ஆகஸ்ட் மாதம் டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரின் படி ஆர்டரை பெறும் நிறுவனமே மீட்டர்களை பொருத்தி, அதனை பராமரிக்க வேண்டும். இதற்கான கட்டணத்தை மின் வாரியம் மாதம் மாதம் செலுத்தும் அடிப்படையில் டெண்டர் விடப்பட்டது .

4 பகுதிகளாக இந்த டெண்டர் விடப்பட்ட நிலையில் முதல் பகுதியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 8 மாவட்டங்களுக்கு மட்டும் 82 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர் விடப்பட்டது. அதானி உள்பட 4 நிறுவனங்கள் இந்த டெண்டரில் பங்கேற்று இருந்தது. அதானி நிறுவனம் தான் 4 நிறுவனங்களில் மிக குறைவான தொகையை கோரியிருந்தது. இந்த நிலையில், தமிழக அரசு நிர்ணயித்து இருந்த தொகையை விட அதானி நிறுவனத்தின் தொகை அதிகமாக இருந்ததால், அந்த டெண்டரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாட்டில் தற்போது வீட்டு மின் இணைப்ப்புகளுக்கு இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்சார பயன்பாடு கணக்கிடப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பிறகு மாதம் ஒரு முறை மின் கட்டணத்தை கணக்கிடும் முறையை செயல்படுத்த திட்டமிடப்பட்டது. ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர்களை அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு வலியுறுத்தி வரும் நிலையில், 100 யூனிட் மானிய மின்சாரம் மறுக்கப்படும் என நுகர்வோர் அச்சப்படுவதால் போஸ்ட் பெய்டு மீட்டர் முறையை அமல்படுத்த தமிழக மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்களில் அதானி நிறுவனம் குறைந்த தொகை கோரியிருந்தது. இருப்பினும், அண்டை மாநிலமான புதுச்சேரிக்கு அதானி நிறுவனம் ஸ்மார்ட் மீட்டருக்கு கோரிய தொகையுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டிற்கு அதிமான தொகையை கோரியிருந்தது. குறிப்பாக மீட்டர் பராமரிப்பிற்கு மும்முனை(3 பேஸ்) மீட்டர் ஒன்றுக்கு புதுச்சேரிக்கு ரூ.120 கோரியது ஆனால் தமிழ்நாட்டிற்கு ரூ.169 கோரியது.

அதேபோல ஒருமுனை(சிங்கில் பேஸ்) மீட்டருக்கு புதுச்சேரிக்கு ரூ.70ம் தமிழ்நாட்டிற்கு ரூ.120ம் கோரியது. இந்த வித்தியாசத்தை சுட்டிக்காட்டி விலையை குறைக்க தமிழ்நாடு மின்வாரியம் பல கட்ட பேரங்கள் நடத்தியது. அதானி நிறுவனமும் படிப்படியாக விலையை குறைத்தது, இருப்பினும் இறுதியாக மும்முனை மீட்டருக்கு ரூ.139ம், ஒருமுனை மீட்டருக்கு ரூ.96ம் இறுதி தொகையாக நிர்ணயித்தது. இது தொடர்பாக நிர்வாக கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் டெண்டரை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர். டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து மட்டுமே தகவல் வெளியாகியுள்ளது. தமிழக மின்வாரியம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. அடுத்த சில தினங்களில் டெண்டர் ரத்து செய்யப்பட்டதற்கான அறிவிப்பை வெளியிட்டு ஸ்மார்ட் மின் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டரானது மீண்டும் விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2025ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டம் தாமதமாக செயல்படுத்தப்படும் பட்சத்தில் இந்த திட்டத்திற்கு ஒன்றிய அரசு தரப்பில் வழங்க வேண்டிய மாணியம் கிடைக்காமல் போகவும், அதனை கடனாகவே ஒன்றிய அரசு வழங்க வாய்ப்புள்ளதாகவும் மின் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post அதிக தொகை கோரிய அதானி நிறுவனம் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டது: மின்வாரிய அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: